பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர்... ஓராண்டிற்கு பிறகு வீடியோ வைரலானதால் இளைஞர் கைது!

0 5411
கைது செய்யப்பட்ட இளைஞர் கவுதம்

குன்னூரில் பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய சம்பவம் ஓராண்டிற்கு பிறகு சமுக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாக பரவி வருகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்களும், சமூக நல ஆர்வலர்களும் குன்னூர் நகர போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வைரல் வீடியோவில் இருந்த இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வீடியோவில் உள்ள இளைஞர் குன்னூர் சட்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் கவுதம் (23) என தெரியவந்தது. அவர் கோவை தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இதனையடுத்து அந்த இளைஞரையும், அந்த பள்ளி மாணவியையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவை பெண்ணின் உறவினருக்கு அனுப்பி திருமணம் செய்து வைக்க சொல்லி அனுப்பியதாகவும், தற்போது எப்படி சமூக வலைத்தளத்தில் பரவியது என்றும் தெரியவில்லை என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞர் கவுதமை குன்னூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். ஒரு வருடத்திற்கு முன் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments