கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்.! உடன்பாடு காண்பதில், திமுக ஜரூர்.!

0 3449
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்.! உடன்பாடு காண்பதில், திமுக ஜரூர்.!

திமுக கூட்டணியில், மதிமுக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இறுதி செய்து அறிவித்தார்.

இதன்படி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு, கடையநல்லூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும், ஐ.யூ.எம்.எல் வேட்பாளர்கள் ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணி தொகுதிகள் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர். இதன்படி, மதிமுகவுக்கு, மதுராந்தகம், வாசுதேவநல்லூர், சாத்தூர், அரியலூர், மதுரை தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். இந்த 6 தொகுதிகளிலும், மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கின்றனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியுடன் திமுக உடன்பாடு எட்டிய நிலையில், உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்கியது. அதில், பார்வர்டு பிளாக் தலைவர் கதிரவன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

ஆதித் தமிழர் பேரவை கட்சிக்கு அவிநாசி தொகுதியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். இதில், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை கட்சிக்கு, நிலக்கோட்டை தனித் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, உதயசூரியன் சின்னத்தில், அக்கட்சி போட்டியிடுகிறது.

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினருடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 தொகுதிகளில், 4 தொகுதிகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறினார். எஞ்சிய 2 தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை, வியாழக்கிழமை மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்றார்.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியினரோடு, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அன்றைக்குள் இறுதி செய்யும் முடிவில் திமுக முனைப்புக் காட்டுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. இவை ஒருபுறம் இருக்க, திட்டமிட்டவாறு இன்று தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிடுவதில், திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments