சில்மிஷ குரங்கு சிலையான சிறுவன்..! முத்தம் கொடுத்து வம்பு

0 152108
சில்மிஷ குரங்கு சிலையான சிறுவன்..! முத்தம் கொடுத்து வம்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பலரையும் கடித்து அட்டகாசம் செய்து வரும் குரங்கிடம் சிக்கிய சிறுவன் சிலை போல நடித்து தப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது. கையை பிடித்து இழுத்து  வம்பிழுத்த சில்மிஷ குரங்கிற்கு, நேக்காக டேக்கா கொடுத்த சிறுவன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் ஒற்றை குரங்கு ஒன்று ஊருக்குள் புகுந்து பலரையும் விரட்டி விரட்டி கடித்து அச்சுறுத்தி வருகின்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களையும் கடித்து குதறி உள்ள சூழலில் அந்த குரங்கிடம் 10 வயது சிறுவன் ஒருவன் சிக்கிக் கொண்டான்..!

அரசு பள்ளிக்கூடத்தின் சுற்று சுவற்றில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனின் பெயர் பாரதி..! அவன் அருகில் எதிர்பாராத நேரத்தில் பாய்ந்து வந்து அமர்ந்து லூட்டியடிக்கத் தொடங்கியது அந்தக் குரங்கு! சிறுவனை மீட்க முயற்சிக்காமல் அப்பகுதி மக்களும், சுற்றி திரிந்த நாய்களும் அலறி அடித்து ஓட்டம் பிடிக்க ஒற்றை ஆளாக சிலை போல நடித்து சமாளிக்க தொடங்கினான் அந்த கில்லாடிச் சிறுவன்..!

முதலில் சிறுவனின் கையைபிடித்து இழுத்த குரங்கு, அடுத்து அந்த சிறுவனுக்கு முத்தம் கொடுத்து பார்த்தது, அவனை தள்ளிப்பார்த்தது சிறுவன் அசைந்து கொடுப்பதாக இல்லை..!

அந்த சில்மிஷ குரங்கோ சிறுவனை விடுவதாக இல்லை. முன்பக்கமாக சென்று சிறுவனுக்கு இரண்டாவது முத்தம் கொடுத்து கையை பிடித்து இழுத்தது. நெஞ்சில் தலைவைத்து அவனது இதயத்துடிப்பை பரிசோதித்தது..! ஆனால் நம்ம பையன் சிலை போல அமர்ந்து குரங்கிற்கு டப்ஃ பைட் கொடுத்துக் கொண்டிருந்தான்

சுமார் 7 நிமிடங்கள் வரை அச்சிறுவனை அசைக்க குரங்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தாவிச்செல்ல, விட்டால் போதும் என்று சிறுவன் சுவறில் இருந்து குதித்து தப்பியதாக கூறப்படுகின்றது.

எப்படியும் சிறுவன் அந்த குரங்கிடம் கடிபடுவான் என்ற எதிர்பார்ப்புடன் இந்த காட்சியை இரு இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்த நிலையில், உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்றுரைத்த பாரதியின் பெயரை தாங்கிய அந்த சிறுவன், வானரத்தின் அட்டகாசத்திற்க்கு அசத்தலாக அல்வா கொடுத்து தப்பி இருக்கிறான்..! என இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது.

அதே நேரத்தில் பெரும் தொல்லையாக மாறி வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வன உயிரியல் காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments