எல்லையில் அமைதி காக்க இந்தியாவும் பாகிஸ்தானும் உறுதி

0 1352
எல்லையில் அமைதி காக்க இந்தியாவும் பாகிஸ்தானும் உறுதி

எல்லையில் அமைதி நிலவுவதற்காக,  2003 ம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கையை  கடைபிடிக்க உறுதி எடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. இது ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கை என அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் முன்னறிவிப்பின்றி துப்பாக்கிச் சூடுநடத்துவதும், எல்லையோர கிராமங்களில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த ஆண்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்ததால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகளும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதையடுத்து இருநாடுகளும் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன.

2003ம் ஆண்டு உடன்படிக்கையின் படி, எல்லையில் சண்டை நிறுத்தத்தை இருதரப்பினரும் உறுதியாகக் கடைபிடிக்கப்போவதாகவும், உடனடியாக இது அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப்பகுதியில் அமைதி நிலவுவதற்காக தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையிலான நேரடி தொலைத் தொடர்புகள், கொடி அணிவகுப்புகள் மூலம் எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானுடன் சுமுகமான உறவு வைக்கவே இந்தியா விரும்புவதாகவும் முக்கியப் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்வு காண்பதே இந்தியாவின் கொள்கையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தானின் இந்த அமைதி முயற்சிக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி, இக்கூட்டறிக்கை தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். முன்னேற்றத்தை முன்னெடுக்கும் இந்த நடவடிக்கையை தாங்கள் ஆதரிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் அமைதி காக்க கூட்டறிக்கை வெளியிட்டதற்கு ஐ.நா.சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் எல்லைக் கோடு பகுதியில் அமைதியை காக்கவும் தொடர்ந்து அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடவும் உள்ளதாக அறிவித்திருப்பது மிகுந்த ஊக்கமளிக்கும் தகவலாக இருப்பதாக ஐநா.பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments