மாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..! அறிவிப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும்

0 7604
மாணவர்கள் ஒட்டு மொத்த தேர்ச்சி..! அறிவிப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும்

9, 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் ஆல் பாஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பால், தமிழக மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில பெற்றோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, பல பெற்றோர் அதிர்ச்சி தெரிவித்த தகவல் குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு.

கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் 9 மற்றும் 10 ஆகிய இரு வகுப்பு மாணவர்களும் ஒட்டு மொத்தமாக தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டு, கூடுதலாக 11 வது வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இம் முடிவு, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பல பெற்றோர், மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்படும் என கவலை தெரிவித்தனர்.

அனைவருமே தேர்ச்சி என்பதால் யார் நன்றாக படிக்கும் மாணவர், யார் படிக்காதவர் என்ற எந்த வித்தியாசமும் இருக்காது என்பது சிலரது கருத்து. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் மாணவர்களின் திறனை இது போன்ற அறிவிப்புகள் மழுங்கச் செய்யும் என பெற்றோர் சிலர் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் பொதுத்தேர்வு என்பது மாணவர்களை விட தங்களுக்கு தான் அதிக அழுத்தம் தரும் என சில பெற்றோர் தெரிவித்தனர். தேர்வு ரத்து அறிவிப்பு தங்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுத்திருப்பதாக சில பெற்றோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொரோனா பிரச்சனை, ஆன்லைன் வகுப்புகள் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்ததாக பெற்றோர் கூறியுள்ளனர். இந்த சூழலில், பொதுத் தேர்வை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமானது என்ற அவர்கள், அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பால் ஒரு புறத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், அதேநேரம், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் பல பெற்றோரிடம் இருக்கிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments