தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு காப்பீடு அளிக்க புதிய திட்டம்..!

0 2966
தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு காப்பீடு அளிக்க புதிய திட்டம்..!

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில், புதிய அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் 2 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கப்படும். குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால், 4 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும், காப்பீட்டுக்கான தொகையை தமிழக அரசே ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயிர் கடன் தள்ளுபடிக்கு 5 ஆயிரம் கோடி ரூபாயும், பயிர் காப்பீடு திட்டத்திற்கு 1738 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு 13,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்வு

சென்னையில் போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் 3 கட்டத் திட்டத்தில் முதல் கட்ட திட்டம் 3140 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6683 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. காவல்துறையை நவீனமயமாக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க 3016 கோடி ரூபாயும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் நிதியாக 3548 கோடி ரூபாயும், பிரதமரின் நகர்ப்புற வீடு வழங்கும் திட்டத்திற்கு 3700 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் 2000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறைக்கு 623 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments