அய்யப்பன் மெட்ட கடன் வாங்கி கர்ணன் அழைப்பு..! சந்தோஷ கண்டா வரச்சொல்லுங்க..!
கிராமிய பாடகர் தேக்கம் பட்டி சுந்தர்ராஜனின் அய்யப்பன் பாடல் மெட்டை கடன் வாங்கி கர்ணன் படத்தின் அறிமுக பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் ஏதோ அவரே சுயசிந்தனையில் மெட்டமைத்து பாடியது போல காட்டிக் கொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
தர்பார் படத்தின் அறிமுக பாடலுக்கு அய்யப்ப சாமி பாடலை சுட்டதாக அப்போது இசையமைப்பாளர் அனிருத் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சிக்கி இருக்கிறார்.
பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ள கர்ணன் படத்தின் முதல் பாடல், கர்ணன் அழைப்பு என்ற பெயரில் வெளியிடப்படது.
தமிழ் திரை உலகில் இதற்கு முன்பு யாருமே பறை இசையை பயன்படுத்தாதது போல மைக்குகளையும், பறைஇசைக் கருவியையும் சேர்த்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில் முன்னோட்டம் விட்ட நிலையில் கர்ணன் படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
ஏதோ ரொம்ப கஷ்டப்பட்டு தெம்மாங்கு பாடலுக்கு மெட்டமைத்தது போல சந்தோஷ் நாராயணன் கர்ணன் அழைப்பை முரட்டுக் குரலில் பாடி மிரட்டி இருப்பார்
யூடியூப்பில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள இந்த பாடலின் மெட்டு கிராமிய பாடகர் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனுக்கு சொந்தமானது.
கண்டா வரச்சொல்லுங்க என்றவரியும் அவருடையது தான்.. ராம்ஜி ஆடியோ வெளியிட்ட அய்யப்பசாமி பாடலான கண்டா வரசொல்லுங்க பாட்டில் மணிகண்டனை தூக்கிட்டு கர்ணன் என்ற பெயரை போட்டு மைக் முன்பாக நின்று பாடிலாங்வேஜ் கொடுத்துள்ளார் சந்தோஷ் நாராயணன் என்று கூறப்படுகின்றது
காப்பி மெட்டை பயன்படுத்தியதற்கு பரிகாரமாக கர்ணன் அழைப்பு பாடல் தொடங்குவதற்கு முன்பு கண்சிமிட்டும் நேரத்தில் வந்து செல்லும் வகையில் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனுக்கும் அதனை வெளியிட்ட ஆடியோ நிறுவனத்திற்கும் நன்றி கார்டு போட்டுள்ளனர் படக்குழுவினர்.
சாமிப்பாட்டை சுட்டு போட்ட மெட்டுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பால் கர்ணன் டிரெண்டிங்கில் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கிராமிய பாடகர் தேக்கம் பட்டி சுந்தரராஜனின் குரலில் ஹிட்டான கிராமிய சாமி பாடலான அங்கே இடி முழங்குது பாடல் மெட்டும் இதே சாயலில் தான் இருக்கும்
இப்போதுள்ள இசையமைப்பாளர்களுக்கு சொந்தமாக இசை அமைக்க வருகிறதோ இல்லையோ, ஏற்கனவே ஹிட்டான கிராமிய பாடல்களை சத்தமில்லாமல் சுட்டு புது மெட்டுப்போட தெரிகின்றது என்று விமர்சனம் முன்வைக்கப் படுகின்றது.
தமிழ் திரை உலகில் இளையராஜாவைவிட எவரும் பறை இசையை அதிகம் பயன்படுத்தியது இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அவர் அதனை குறிப்பிட்டு எங்கும் இதனை இப்படி விளம்பரப்படுத்த விரும்பியதில்லை.
அதே நேரத்தில் சுட்டாலும் ஒரு நொடியாவது நன்றி கார்டு போட்ட சந்தோஷ் நாராயணன் எங்கே ? சத்தமில்லாமல் சுட்டு தன்பெயரை மட்டுமே போட்டுக் கொள்ளும் அனிருத் எங்கே ? என்று இசை ரசிகர்கள் இருவரையும் கலாய்த்து வருகின்றனர்.
Comments