தூத்துக்குடி அருகே கால்வாயில் கவிழ்ந்த டாடா ஏஸ் வாகனம்: கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 5 பேர் பலி

0 3413
தூத்துக்குடி அருகே கால்வாயில் கவிழ்ந்த டாடா ஏஸ் வாகனம்: கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 5 பேர் பலி

தூத்துக்குடி அருகே வயல் வேலைக்காக டாடா ஏஸ் வாகனத்தில் 30 பெண்கள்  அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி  சாலையோர கால்வாயில் கவிழ்ந்ததில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட  5 பேர் உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் மணப்படை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வயல்காட்டில் களைபறிக்கும் வேலைக்காக, சவரிமங்கலம் கிராமத்திற்கு 30 பெண்களை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். மணியாச்சி அருகே உள்ள கோழிப்பண்ணை வளைவில் வேகமாக திரும்பியபோது பாரம் தாங்காமல், நிலைதடுமாறிய டாடா ஏஸ் வாகனம், சாலையோரத்தில் இருந்து கால்வாயில் கவிழ்ந்தது.

வாகனத்துடன் 30 பேரும் கால்வாயில் விழுந்ததில், அதிலிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 5 பெண்கள் உயிரிழந்தனர். அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். குறுகிய கால்வாயில் வாகனத்தோடு 30 பேர் கவிழ்ந்து விழுந்ததால் பெரும் சிரமத்துடன் வாகனத்தை நிமிர்த்தி, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து வந்து சேர்வதற்கு தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில், 15 பேர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 6 பேர் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்பற்ற முறையில், 30 பெண்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. ஓட்டுநருக்கு எதுவும் நேராத நிலையில், அந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகைய்யா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments