கர்நாடகா : ஊருக்குள் புகுந்து தம்பதியை தாக்கிய சிறுத்தை... வனத்துறையினர் மீது மக்கள் குற்றச்சாட்டு!

0 3729

கர்நாடகத்தில்  தம்பதியை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

தக்ஷின கன்னடா மாவட்டம் கடபா தாலுகா ரெஞ்சிலாடி அருகே ஹேரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால், ஹேரா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்திற்குள் சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி  ஆடு, மாடு, கோழிகளை அடித்து கொன்று தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வனவிலங்குகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள்  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹேரா கிராமத்தைச் சேர்ந்த சேகர் - சவுமியா தம்பதி தங்களது பாக்கு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து இரைதேடி வந்த  சிறுத்தை ஒன்று பாக்குதோட்டத்திற்குள் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தம்பதியை கடித்து குதறியது. இதனால் 2 பேரும் சிறுத்தையிடமிருந்து தப்பிக்க  கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் சிறுத்தை, அங்கிருந்து தப்பித்து வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது.

சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த சேகர் - சவுமியா தம்பதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் ஹேரா கிராமத்தில் பாக்கு தோட்டம் உள்பட வனப்பகுதியொட்டிய பகுதிகளில் சிறுத்தையை பிடிக்க ஆங்காங்கே இரும்பு கூண்டுகள் வைத்துள்ளனர். 

பாக்குதோட்டத்தில் மரத்தில் ஏறியிருந்த  சிறுத்தை மீது கால்நடைமருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். மயக்க ஊசி உடலில் பாய்ந்ததும் சிறுத்தை ஆக்ரோஷமாக மரத்தில் இருந்து குதிக்க முயன்ற பின்னர் அப்படியே மயங்கியது. இதையடுத்து வனத்துறையினர் வலையை விரித்து அந்த சிறுத்தையை பிடித்தனர். பின்னர் சிறுத்தை, பிலிகுலா வனஉயிரியில் பூங்காவில் விடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments