அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை..!

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகச் சட்டமன்றத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார், துணை ஆணையர் உள்ளிட்ட குழுவினர் 2 நாள் பயணமாகச் சென்னைக்கு வந்துள்ளனர். இந்தக் குழுவினர் கிண்டியில் உள்ள விடுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிகளைத் தனித்தனியாகச் சந்தித்துத் தேர்தலை நடத்துவது தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடனும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். நாளை தமிழகத் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியபின் புதுச்சேரித் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்துவதற்காகச் சாலை வழியாகப் புதுச்சேரிக்குச் செல்கின்றனர்.
அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்துப் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக ஏப்ரல் நான்காவது வாரத்தில் நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அஞ்சல் வாக்கு அளிக்க அனுமதித்திருப்பதை அதிமுக வரவேற்பதாகப் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
திமுக சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்த அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாப்பாக வைக்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யவும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
Comments