இணையத்தில் வெளியானது மாஸ்டர் படக் காட்சிகள்.... ரசிகர்கள் அதிர்ச்சி!

திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே இணையத்தில் வெளியானது மாஸ்டர் திரைப்படம். இதனால் படக்குழுவினர் மற்றும் விஜயின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.
இதனிடையே அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. அதேபோல் வசனமே இல்லாமல் வெளியான டீசரும் ட்ரெய்லர் குறித்த எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்த படக்குழு தியேட்டர்களில் 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்ள தமிழக அரசிடம் அனுமதி கோரியது.
அதேவேளையில் மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பை வாபஸ் பெற்று 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற பழைய நிலையே தொடரும் என்று அறிவித்தது.
இந்நிலையில் நாள்தோறும் ஒவ்வொரு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு மும்முரமாக விளம்பரம் செய்து வரும் படக்குழு இன்று விஜய் - விஜய் சேதுபதி மோதும் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளது. நாளுக்கு நாள் புதிய போஸ்டர்களை ,வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது மாஸ்டர் படக்குழு. தற்போது படக்குழுவினருக்கே அதிர்ச்சி தரும் வகையில் மாஸ்டர் படத்தின் 1 மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Comments