கனமழையால் வெள்ளப்பெருக்கு குடியிருப்புகள், பயிர்கள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், வயல்களில் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாகக் கனமழை பெய்ததால் மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் நகரின் நடுவே மணிமுத்தாற்றுப் பாலத்தில் நின்று வெள்ளக் காட்சியைப் பொதுமக்கள் கண்டுகளித்தும் படம்பிடித்தும் மகிழ்ந்தனர். வெள்ளத்தை வேடிக்கை பார்த்த பொதுமக்களைக் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
கனமழை காரணமாகக் கோமுகி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால் வேப்பூர் அருகே சேதுராயன்குப்பம், மரூர் இடையே உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் இவ்வழியாகச் சாலை துண்டிக்கப்பட்டுப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
கனமழையால் ஏரி உடைந்து நீர் வெளியேறுவதால் கடலூர் மாவட்டம் அறந்தாங்கி பா.புத்தூருக்குள் வெள்ளம் புகுந்தது. ஐம்பதுக்கு மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம் பகுதிகளில் இரு நாட்களாகக் கனமழை பெய்தது. சவுந்திரசோழபுரத்தில் 200 ஏக்கர் பரப்பில் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேங்கிய நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மே.மாத்தூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை வழியாக மணிமுத்தாற்றில் நொடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் பாய்ந்து வருகிறது. கரைபுரண்டு வெள்ளம் பாய்வதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வயல்களில் நீர் தேங்கியுள்ளது. நெற்பயிர்களும் தோட்டப் பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Comments