போலீஸ்காரர் எழுதிய தற்கொலை மிரட்டல் கடிதம்!- அறிவிப்புப் பலகையில் ஒட்டிய எஸ்.பி

விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை காவலர் ஒருவர் பணிமாற்றம் வழங்காததால் தற்கொலை செய்யப்போவதாக காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிற்கு கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு பெயர் குறிப்பிடாமல் மொட்டை கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில், ஆயுத படை காவலர்களுக்கு முறையான பணிமாற்றத்தை உயர் அதிகாரிகள் வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும், தான் இறந்த பிறகுதான் யார் என்று அடையாளம் தெரியவரும் என்றும், தன் இறப்பை சூதாட்டத்துடன் சம்மந்தப்படுத்திவிட வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது . 3 முறை குறையை முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், இறந்த பின், எந்த ஒரு காவல் அதிகாரியின் நிழலும் தன் சடலத்தின் மீது படக்கூடாது என்றும் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது.
தன்னுடன் வேலை செய்யும் சக காவலர்களையும் பணிமாற்றம் கேட்டு வேறு மாவட்டம் செல்லும்படி அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து விழுப்புர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், காகுப்பத்திலுள்ள ஆயுதபடை வளாகத்துக்கு சென்று ஆயுதப்படை காவலர்களை நேரில் சந்தித்து பேசினார்.
குறைகள் எதுவாக இருந்தாலும் தன்னை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பயம் இல்லாமல் பேசலாம் என்றும் குறைகள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் . முகவரியில்லாத கடிதங்கள் மூலம் யாருக்கு என்ன பிரச்சனை என்பதை அறிய முடியாது என்று கூறிய எஸ்.பி . ராதாகிருஷ்ணன் அந்த கடிதத்தை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டிவிட்டு சென்றார்
Comments