கொரோனாவை தாண்டி இந்தியாவில் உச்சம் தொட்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை

0 4272

கடந்த அக்டோபர் மாதத்தில் 42% ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த  சூழலில் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள்  ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்து, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை ஒவ்வொரு மாதமும் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது.  கொரோனா காலத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தேக்கநிலை நீடித்தது.

மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் செல்போன் விற்பனை நிலையங்கள்  மூடப்பட்டதால் ஆன்லைன் விற்பனையும் நிறுத்தப்பட்டது. இதனால்,  ஸ்மார்ட்போன்களுக்கான விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு விற்பனை தொடங்கிய போதும் கூட மக்களிடையே பண இருப்பதால் ஸ்மார்ட்போன் வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பிறகு,  ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஓரளவுக்கு ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்தது. தொடர்ந்து,  அக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இண்டர்நேஷனல் டேட்டா கார்பரேசன் (ஐடிசி) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டேட்டா கார்பரேசன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 21 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இது முந்தைய அக்டோபர் கால விற்பனைகளைவிட 42 சதவீத வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களை சேர்ந்த மக்கள், ஆன்லைன் மூலம் அதிகளவில் செல்போன்களை வாங்கியிருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. பண்டிகை கால விற்பனை சிறப்பாக இருந்ததால் ஸ்மார்ட்போன் விற்பனையில் மிகப் பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் மொத்தம் 140 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments