நெதர்லாந்திலிருந்து கடத்தப்படும் போதை மாத்திரைகள் - பெங்களூருவில் விற்ற கேரளத்தவர் இருவர் கைது!

தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை நெதர்லாந்திலிருந்து கேரளாவுக்குக் கடத்திவந்து, பெங்களூருவில் சட்ட விரோதமாக விற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் சாம்ராஜ்பேட்டையில் உள்ள தபால் நிலையத்துக்கு வந்த பார்சல் ஒன்றில் போதை மாத்திரைகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அந்தப் பார்சலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் திறந்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட எல்.எஸ்.டி. போதை மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பார்சல் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து பெங்களூர் புறநகரில் ஆனேக்கல், ஹப்பகோடி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த அருண் அந்தோணி என்பவர் பெயருக்கு வந்தது தெரியவந்தது.
போலீசார் விரைந்து சென்று அருண் அந்தோணியை விசாரித்தபோது, “கோட்டயத்தைச் சேர்ந்த தனது நண்பரான கணேஷ் என்பவர் அனுப்பி, அமல் பைஜூ என்பவரிடம் கொடுக்கச் சொன்னார்” என்று தெரிவித்தார். அருண் அந்தோணியின் மீது சந்தேகம் அடைந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை நெதர்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வரவழைக்கப்படும். பிறகு, கணேஷ் அங்கிருந்து பார்சல் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைப்பான். அந்த போதை மாத்திரைகளை அருண் அந்தோணியும், அமல் பைஜூவும் சேர்ந்து பெங்களூருவில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அருண் அந்தோனியும் கணேஷ்ம் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாகியுள்ள அமல் பைஜூவை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். கைதான 2 பேரிடமிருந்தும் ரூ. 15 லட்சம் மதிப்பிலான 400 எ.எஸ்.டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடமும் போலீசாரி தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
Comments