நல்லா இருந்த தோழியும் நாலு கொள்ளையர்களும்..! கொள்ளைக் கூட்ட பாஸ்ஸான பெண்

0 7774
நல்லா இருந்த தோழியும் நாலு கொள்ளையர்களும்..! கொள்ளைக் கூட்ட பாஸ்ஸான பெண்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தோழியின் வீட்டுக்கு 4 கொள்ளையர்களை அனுப்பி கைகால்களை கட்டிபோட்டு நகைகளை கொள்ளையடித்த பெண் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அடகு நகைகளை மீட்டதை தோழியிடம் சொன்னதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

அருப்புக்கோட்டை கணேஷ்நகரை சேர்ந்தவர் ஜெயகிருபா. கடந்த 10 ஆம் தேதி அவரது வீட்டிற்கு விஷேச அழைப்பிதழ் கொடுப்பது போல் 4 இளைஞர்கள் வந்தனர். வீட்டில் தனியாக இருந்த ஜெபகிருபாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, கை, கால்களை கட்டிப்போட்ட அந்த கும்பல் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் என 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமாரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். அதில் அருகில் உள்ள நேருநகரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவன் கொள்ளை நடந்த பகுதியை சுற்றி கொள்ளை சம்பவத்திற்கு முன் சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்ததைக் கண்டுபிடித்தனர். அவன் மூலமாக அருண்பாண்டியன் என்ற இளைஞனை கைது செய்து விசாரித்த போது இந்த கொள்ளைச்சம்பவத்துக்கு பாஸ் (boss) ஆக பெண் ஒருவர் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

ஜெயகிருபாவின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது தோழியான முத்துச்செல்வி என்பவர் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. பணத்தேவை இருந்ததால் செய்வதறியாது முத்துச்செல்வி தவித்துக் கொண்டிருந்தபோது, தான் அடகு வைத்த நகைகளை மீட்டு வந்ததை அவரிடம் பெருமையாக கூறியுள்ளார் ஜெயகிருபா..!

இதையடுத்து அந்த நகைகளை எப்படியாவது கொள்ளையடித்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற விபரீத எண்ணம் முத்துலட்சுமிக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னுடைய நண்பர்களான அருண்பாண்டியன், கணேஷ்குமார், சோலைச்சாமி, ஹரிஹரன் ஆகியோரை மூளைச்சலவை செய்து தனது கொள்ளைத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளார் முத்துச்செல்வி என்கின்றனர் காவல்துறையினர்.

யாரும் இல்லாத நேரத்தில் 4 பேரையும் ஜெயகிருபாவின் வீட்டிற்கு வரவழைத்து, அவர்கள் மூலம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளை அடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொள்ளைக் கூட்ட பாஸ் முத்துச்செல்வியையும், கன்னிக் கொள்ளையர்களான 4 இளைஞர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, கொள்ளையடித்த நகைகளையும், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். இதுல என்ன ட்விஸ்ட் என்றால், முத்துச்செல்விக்காக நகைக் கொள்ளையில் ஈடுபட்டதால், தன்னுடைய போர்டு பிகோ காரை பறிக்கொடுத்து விட்டு சிறையில் கம்பி எண்ணுகிறார் நண்பர்களின் ஒருவர் ..!

பெண்ணாசை, பொன்னாசை, இவற்றுடன் பேராசையும் சேர்ந்தால் வாழ்க்கையில் சீரழிவைத் தரும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments