வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. கூட்டு சேர்ந்து சீரழித்த கும்பல்..!

0 2383

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித் தராத பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமியை, ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரு பெண்கள் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்காக செல்போன் கேட்டு அடம் பிடித்துள்ளார்.

பெற்றோரிடம் செல்போன் வாங்கித்தரும் அளவுக்கு வசதி இல்லையென்று கூறப்படுகின்றது. இதனால் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு மாணவி வீட்டை விட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது. சிறிது நேரத்தில் அவர் செல்போன் மூலம் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு கோவையில் தோழியுடன் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரும் அந்த மாணவியை தேடவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் 35 நாட்கள் கழித்து மிகவும் உடல் மெலிந்த நிலையில் அந்த மாணவி மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவருக்கு உடல் நிலை கடுமையாக பாதிப்படைந்திருந்தது. அவரை சிகிச்சைக்காக பெற்றோர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியிடம் கடுமையான பாலியல் அத்துமீறல்கள் நடந்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய மாணவி பரமக்குடி பேருந்து நிலையத்தில் எங்கே செல்வது எனத் தெரியாமல் சுற்றித் திரிந்துள்ளார். இதனை கவனித்த பழ வியாபாரம் செய்து வரும் நீலாவதி என்ற பெண் மெல்ல பேச்சு கொடுத்து செல்போன் வாங்கித்தருவதாக ஆசைகாட்டி மாணவியை ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளார்.

தன்னை பெற்றோர் தேடுவார்கள் என்று கூறிய மாணவியிடம் கோவையில் ஒரு தோழி வீட்டுக்கு வந்திருப்பதாகவும் வேலையில் சேரப் போவதாகவும் பெற்றோரிடம் நீலாவதி பொய் சொல்லவைத்துள்ளார்.

சுமார் 35 நாட்கள் சிறுமியை அறை ஒன்றில் அடைத்து வைத்து நீலாவதியும் அவரைச் சார்ந்தவர்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் பயந்துபோன அந்த கும்பல், அவரை அதே பரமக்குடி பேருந்து நிலையத்திலேயே கொண்டு வந்து விட்டுச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பரமக்குடி கருணாநிதிபுரத்தைச் சேர்ந்த நீலாவதி, காளையார்கோவிலைச் சேர்ந்த பஞ்சவர்ணம், ஆட்டோ ஓட்டுநர் முனீஸ்வரன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெற்றவர்களை தவிர பிள்ளைகள் நலனில் வேறு எவருக்கும் உண்மையான அக்கறை இருக்காது, அப்படி ஆசை காட்டுவோரின் வலையில் விழுந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம் ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments