சீட்டு பணத்தை வாங்க தீக்குளித்த இளைஞர்: அருகில் உயிர் கருகுவதை அலட்சியம் செய்த நபர்..!

0 16864

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சீட்டு பணத்தை பல மாதங்களாக தரமறுத்த நபர் முன்னிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அருகிலேயே ஒரு உயிர் எரிந்து கருகும் வேளையில், ஈவிரக்கமின்றி, சீட்டுப் பணத்தை தரவேண்டிய நபர் தனது வாகனத்தை நகர்த்தி வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நெல்லை மாவட்டம் சிவந்திபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் தச்சுத் தொழிலாளி. இவர் கஸ்பா பகுதியை சேர்ந்த மரிய செல்வம் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் சீட்டு போட்டுள்ளார். பாலசுப்பிரமணியன், சீட்டு பணத்தை தவறாமல் கட்டி வந்ததாகவும், முதிர்வு காலம் அடையவே சீட்டு பணத்தை கேட்டபோது மரிய செல்வம் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து அலைக் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மரிய செல்வத்தின் வீட்டுக்கு சென்ற பாலசுப்பிரமணியன், தனது பணத்தை தர வேண்டும் இல்லை என்றால், உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறியதாக சொல்லப்படுகிறது. அதை மரிய செல்வம் பொருட்படுத்தாமல் இருந்த நிலையில், பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென பாலசுப்பிரமணியத்தின் உடல் முழுவதும் பரவியது.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சிசிடிவி காட்சியில், ஈவிரக்கமற்ற கல் நெஞ்சின் கயமைத்தனமும் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தில் பாலசுப்ரமணியம் உடலில் பெட்ரோலை ஊற்றிய போது பணத்தை தர வேண்டிய மரிய செல்வம், எந்தவித பதற்றமும் இன்றி இங்கும் அங்கும் சென்று தனது இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்துவதிலேயே முனைப்பாக இருந்தது, அவரது வீட்டு சிசிடிவியிலேயே பதிவாகியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆம்புலன்ஸை வரவழைத்து பாலசுப்பிரமணியத்தை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாலசுப்பிரமணியன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, விக்கிரமசிங்கபுரம் போலீசார் மரியசெல்வத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மரியசெல்வம் ஏற்கெனவே பலரிடம் சீட்டு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும், இதுகுறித்து வி.கே.புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், 45 வயது தச்சுத் தொழிலாளியான  பாலசுப்பிரமணியன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், மரிய செல்வத்தை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments