பேஸ்புக் மோசடி... கூகுள் வாய்சால் விளையாடிய மக்கு பாய்ஸ் கைது..!

0 4812

ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரில், போலியான முகநூல் கணக்கை தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்டு வந்த ராஜஸ்தானை சேர்ந்த 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். செல்போன் சிக்னல் மூலம் துப்பு துலக்கி, ஒரு வாரம் ராஜஸ்தானில் தங்கியிருந்து இருவரையும் தூக்கிய பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில், போலியாக முகநூல் கணக்கு தொடங்கி அவர்களின் நட்பு பட்டியலில் உள்ள நபர்களிடம் அவசரமாக பணம் தேவை என கூறி ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் கேட்டு ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது.

இதே பாணியில் மோசடியில் ஈடுபட்ட முஷ்தகீன் கான் என்பவனை தெலங்கானா போலீசார் கைது செய்ததை அடுத்து, அவனிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் ராஜஸ்தான் சென்று ஷகில் கான் மற்றும் ரவீந்திரநாத் ஆகிய இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம், கேத்வாடா மற்றும் சாசன் லேபுரா கிராமங்களை சேர்ந்த இந்த இளைஞர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால், இவர்களுக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவன் மூளையாக செயல்பட்டு முகநூலை எவ்வாறு ஹேக் செய்வது என கற்றுக் கொடுத்து உள்ளான்.

தொழில்நுட்ப ரீதியாக ஹாக் செய்யாமல் ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மாநிலங்களில் செல்போன் எண்களின் கடைசி ஐந்து எண்களை பாஸ்வேர்டாக பயன்படுத்துபவர்கள் அதிகம் என்பதால் அதை பயன்படுத்தி முகநூலை ஹேக் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எழுதவோ படிக்கவோ தெரியாத இந்த மக்கு பாய்ஸ், கூகுள் வாய்ஸ் டைப்பிங் பயன்படுத்தி குறுஞ்செய்திகளை டைப் செய்து முகநூல் மெசஞ்சரில் அனுப்பி கில்லாடியாக பணம் கேட்டு மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.

கூகுள் பே, போன் பே மூலம் பணத்தை பரிமாற்றம் செய்ய சொன்னதால், பயன்படுத்திய செல்போன் சிக்னல் மூலமாகவே இவர்களை அடையாளம் கண்டதாகவும், ஒரு வார காலம் ராஜஸ்தானில் தங்கியிருந்து இருவரையும் கைது செய்ததாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments