பட்டாசுப் பரிசுப்பெட்டிகள் விற்பனை வழக்கத்தை விட சரிவு என வேதனை

0 2778

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் களைகட்டும் பட்டாசுப் பரிசுப் பெட்டிகளின் உற்பத்தியும் விற்பனையும் இந்த ஆண்டு கணிசமாக குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளன்று வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புப் பண்டங்களுடன் பட்டாசு பரிசு பெட்டியும் கொடுக்கும் வழக்கம் உண்டு. வணிக நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு போனஸுடன் பட்டாசுப் பரிசுப் பெட்டிகளை வழங்கி ஊக்கப்படுத்துவர். சற்றே பெரிய துணிக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பட்டாசுப் பரிசுப் பெட்டிகளை வழங்குவர். 150 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை உள்ள இந்த பரிசுப் பெட்டிகள் அனைத்தும் சிவகாசியில் இருந்தே மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும்.

கொரோனா பரவலும் அதற்காக போடப்பட்ட ஊரடங்கும் பட்டாசுப் பரிசுப் பெட்டிகளின் தயாரிப்பையும் விற்பனையையும் பெருமளவு பாதித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் பரிசுப் பெட்டிகள் தயாரிப்பு மந்தமான நிலையிலேயே நடைபெற்று வருவதாக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

நேரில் வந்து பட்டாசுகளை வாங்கும் வழக்கமும் குறைந்துள்ளதால் ஆன்லைன் விற்பனைக்கும் தங்களை தயார்படுத்திக் கொண்டதாக அவர்கள் கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, கல்லூரி மாணவிகள் பகுதி நேரமாக வந்து இந்த பரிசுப் பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபடுவது வழக்கம். நாளொன்றுக்கு அவர்களுக்கு 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். பரிசுப் பெட்டிகள் விற்பனை குறைந்ததால், அவர்களுக்கான வேலை வாய்ப்பும் பறிபோயிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments