பீகார் மக்களை கவர்ந்தவர் யார் ? பலமுனை போட்டி.. சிதறிய வாக்குகள்.!

0 2361

பீகார் சட்டமன்ற தேர்தலில், பல முனை போட்டி ஏற்பட்டாலும், அது., முதலமைச்சர் நிதிஷ்குமாரா? - லாலுவின் மகன் தேஜஸ்வியா? என்பதாக மாறி, கடும் போட்டியை உருவாக்கிவிட்டிருக்கிறது. 

வடக்கே நேபாளம், கிழக்கே, மேற்குவங்காளம், மேற்கே உத்திரப்பிரதேசம், தெற்கே, ஜார்க்கண்ட் ஆகியனவற்றை எல்லையாக கொண்டுள்ள மாநிலம் பீகார்.

3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட பீகாரில், சராசரியாக, 55 விழுக்காட்டிற்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளன.

1968 முதல், 2005ஆம் ஆண்டு வரையில், 6 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலமாக பீகார் உள்ளது.

1990ஆம் ஆண்டுகளிலிருந்து, லாலு பிரசாத் குடும்பத்தின் பிடியிலிருந்த ஆட்சியை அகற்றி, 2000மாவது ஆண்டில், முதன்முறையாக, முதலமைச்சரானார், நிதிஷ்குமார். ஆனால், இந்த பதவி, வெறும், ஒருவார காலம் மட்டுமே நீடித்தது.

இதன்பிறகு, 2005ஆல் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமார், இடையில் ஓர் ஆண்டு தவிர, தொடர்ந்து, ஆட்சி பீடத்திலேயே தொடர்கிறார்.

லாலு பிரசாத் வழியில், எளிதில் மக்களை ஈர்க்கும், தேஜஸ்வி, இந்த தேர்தலில், வேலைவாய்ப்பு குறித்தே, அதிகம் பேசினார். அதிலும் குறிப்பாக, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என தொடர்ந்து பேசியதால், பீகார் இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பை தேஜஸ்வி பெற்றிருக்கிறார்.

அரசு வேலைகள் வழங்கப்படுவதைத் தவிர, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்களுக்கு, நிரந்த ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை அளிப்பதாக தேஜஸ்வி உறுதியளித்தார். அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

நிதிஷ்குமாரும், தேஜஸ்வியும், மாறி, மாறி வாக்குறுதிகளை அள்ளிவீசியபோதும், சட்டமன்ற தேர்தல் ரேசில், நிதிஷ்குமாரே முந்தினாலும், தேஜஸ்வி கடும் போட்டி அளித்துள்ளார்.

உண்மையான அரசியல் என்பது, மனித மகிழ்ச்சியை மேம்படுத்துவதாகவே அமைய வேண்டும் என்ற, பீகாரின் மண்ணின் மைந்தரும், இந்திராவின் எமர்ஜென்சியை வென்றெடுத்துவருமான, ஜெயபிரகாஷ் நாராயணனின் கூற்றினை சாத்தியமாக்கப் போவது யார் என்பதே, சுவாரஸ்ய வினாவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments