மரணத்திற்கு தள்ளிய மாரட்டோரியம்: பங்குச்சந்தை நிறுவனத்தின் முன் தற்கொலை

0 43105
மரணத்திற்கு தள்ளிய மாரட்டோரியம்: பங்குச்சந்தை நிறுவனத்தின் முன் தற்கொலை

பங்குச்சந்தை வர்த்தகத்தில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்த நபர், கோவையில் ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீட்டு நிறுவனத்தின் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரட்டோரியம் எடுத்து கடன்சுமை அதிகரித்ததோடு, பங்களிப்பு ஓய்வுத் திட்டத்தின் குளறுபடிகளாலும் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர் பற்றிய செய்தித் தொகுப்பு...

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 48 வயது தனபால். மனைவி உமா அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவர் உள்ளார்.

தனபால் முழுநேரமாக ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்து வந்துள்ளார். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள், திடீர் சரிவுகளால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு, லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த தனபால், மரண வாக்குமூலம் என 2 கடிதங்களை எழுதி வைத்து விட்டு, கோவை அவினாசி சாலையில் அண்ணா சிலை அருகே செயல்பட்டு வரும் ஃபார்ச்சூன் வெல்த் மேனேஜ்மென்ட் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் முன்பு, இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை கடிதத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியில் 14 லட்ச ரூபாய் தனிநபர் கடன் வாங்கியிருந்த நிலையில், மாரட்டோரியம் எடுத்ததால் கடன்சுமை தாங்க முடியாத அளவு அதிகரித்து விட்டதாகவும், கூட்டு வட்டி தள்ளுபடியாக வெறும் ஆயிரத்து 860 ரூபாய் மட்டுமே தரப்படும் என வங்கி கூறியதாகவும் கடிதத்தில் தனபால் குறிப்பிட்டுள்ளார்.

தமது தற்கொலைக்குப் பிறகாவது மாரட்டோரியம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரவேண்டும் எனக் கூறியுள்ள அவர், மனைவி அரசு ஊழியராக உள்ள நிலையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் தொகை ஒழுங்காக வரவு வைக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் லட்சக் கணக்கில் பணம் இருந்தாலும் தேவைக்கு எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும், தனது மாமனார் இறந்தபோது தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மனைவி கஷ்டப்பட்டதாகவும் தனபால் கடிதத்தில் எழுதிவைத்துள்ளார்.

மனைவியையும் மகனையும் தீராத துன்பத்தில் ஆழ்த்திவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த இளைஞரின் மரணம் துயரமானது என்றாலும், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உணர்ந்தால், வாழ்க்கைப் பாதையில் தவறாக எடுத்து வைத்த அடிகளை திருத்திக் கொள்ள வழி பிறந்திருக்கும்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments