சொத்துக்காக குழந்தையுடன் அக்கா தீ வைத்து எரித்து கொலை!- கைக்குழந்தையுடன் சிறை சென்ற தங்கை

0 62683
கொலை செய்த சுஜதா, குழந்தையுடன் பலியான சுமதி

கள்ளக்குறிச்சியில் தந்தையின் சொத்துக்களை தானே அபகரிக்க திட்டமிட்ட தங்கை, உடன்பிறந்த அக்காவையும் அவரின் குழந்தையுடன் தீ வைத்து எரித்து கொடுவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ளது அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கு சுமதி , சுஜாதா என இரண்டு மகள்கள் இருந்தனர். சுமதியை சின்னசேலம் அருகேயுள்ள பாண்டியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும், இளைய மகள் சுஜாதாவை கடலூர் அருகே வையாபுரி என்பவருக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார் சின்னசாமி. இளைய மகள் சுஜாதா பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்துள்ளார். குழந்தை பிறந்த பிறகும் கடந்த 6 மாதமாக அசகளத்தூரில் உள்ள தாயின் வீட்டில்தான் சுஜாதா இருந்துள்ளார். சுஜாதாவின் குழந்தைக்கு லோகேஷ் கிருஷ்ணன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில், மூத்த மகள் சுமதி தனது ஒரு வயது குழந்தை ஸ்ரீநிதியுடன் அசகளத்தூரில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த 31 -ஆம் தேதி அன்று, சின்னசாமியும் அவரின் மனைவி மயிலும் வேலை நிமித்தமாக வெளியில் சென்று விட்டனர்.

இந்த சமயத்தில் வீட்டிலிருந்த சுமதி மற்றும் சுஜாதாவுக்கும் இடையே தந்தையின் வீடு மற்றும் நிலத்தை   பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுஜாதா, கண்ணிமைக்கும் நேரத்தில் அக்காள் சுமதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், சுமதியின் இடுப்பிலிருந்த கைக்குழந்தை ஸ்ரீநிதி மீதும் தீப்பற்றியது. தாயும், குழந்தையும் தீயில் கருகி அலறி துடித்தனர். உடலில் தீ பற்றி எரிந்த நிலையிலும் ஆத்திரம் தாளாத சுஜாதா இரக்கமே இல்லாமல் கொடுவாளை எடுத்து சுமதியை வெட்டியுள்ளார். வீட்டிலிருந்து அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சுமதி தீயில் கருகி கிடப்பதையும் கையில் கொடுவாளுடன் சுஜாதா நிற்பதையும் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

தொடர்ந்து , படுகாயமடைந்த சுமதியையும்,அவரது குழந்தை ஸ்ரீ நிதியையும்  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  சிகிச்சை பலனளிக்காமல் சுமதி கடந்த ஞாயிற்றுக் கிழமையும், குழந்தை ஸ்ரீநிதி திங்கள்கிழமையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதற்கிடையே, சின்னசாமி வரஞ்சரம் காவல் நிலையத்தில் தன் இளைய மகள் சுஜாதாவை காப்பாற்றும் நோக்கத்தில் மகள் சுமதி தற்கொலை செய்து கொண்டதாக பொய் புகார் அளித்துள்ளார்.

ஆனால், கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் கள்ளக்குறிச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் ஆகியோர் விசாரணையில் உண்மை அம்பலமானது. சின்னசாமியின் இளைய மகள் சுஜாதா தந்ததையின் சொத்தை தான் மட்டுமே அனுபவிக்க கருதி அக்காளை கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து, வரஞ்சரம் போலீஸார் சுஜாதாவை கைது செய்தனர். தற்போது, கைக்குழந்தையுடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஒரு மகள் குழந்தையுடன் கொலை செய்யப்பட்டு விட, இன்னோரு மகள் கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றதால் சின்னசாமி குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் வேதனையிலும் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments