ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி முறையீடு

0 1369
ஆன்லைன் ரம்மிக்கு தடை கோரி முறையீடு

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய வழி சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுக்களுக்கு அடிமையாகி, பணத்தை இழந்து, விரக்தியில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாக மாறி வருகிறது. சமீபத்தில், சென்னை, கோவை, புதுச்சேரியில் 3 இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன் வழக்கறிஞர் நீலமேகம் முறையீடு ஒன்றை முன்வைத்தார். அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்தியாவில் இணைய சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், இளைஞர்களை கவர ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய வழி சூதாட்ட விளையாட்டுக்கள் அதிகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

இதற்கு அடிமையாகி, பல இளைஞர்கள் தங்கள் வாழ்வை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை தடை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை பிரபலங்களான விராட் கோலி, தமன்னா ஆகியோர் விளம்பரம் செய்து ஊக்குவித்து வருவதாகவும், சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது மட்டுமின்றி, விளம்பர தூதுவர்களான இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கவும் முறையீட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments