ஆன்லைன் சூதாட்டம் - இருந்ததும் போச்சு, வாங்கியதும் போச்சு.... பட்டதாரி இளைஞர் தற்கொலை!

0 6536
தற்கொலை செய்துகொண்ட குமரேசன்

சென்னை, செம்பியத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், அதனூர்  கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (( வயது 26 )). பி.இ பட்டதாரியான குமரேசன் சென்னை பெரம்பூரில் நண்பர்களுடன் தங்கி தனியார் வங்கியொன்றில் வாடிக்கையாளர்களிடம் பணம்  வசூலிக்கும் வேலை செய்து வந்தார். வங்கி வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

கொரோனா தீவிரமாகப் பரவத்தொடங்கிய கடந்த மார்ச் மாதம் சொந்த ஊருக்குச் சென்றார் குமரேசன். ஊருக்குச் சென்ற சில தினங்களிலேயே விபத்தில் சிக்கி படுகாயமடைந்து காலில் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. உடல்நலம் தேறியவுடன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை திரும்பினார். சென்னை திரும்பியதும் கை பரபரக்க மீண்டும் ஆன்லைனில் ரம்மி விளையாடத் தொடங்கினார்.  ஒரு கட்டத்தில் ரம்மியில் மூழ்கி, வேலைக்குச் செல்லாமல் கூட விடிய விடிய ரம்மி விளையாடியிருக்கிறார்.  இதனால், நண்பர்களிடமும் தாம்பரத்தில் வசிக்கும் தன்னுடைய தம்பி தில்லை கோவிந்தனிடமும் அடிக்கடி கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய பணம், வேலைக்குச் சென்று ஈட்டிய வருமானம் என்று அனைத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். இதனால், ஒரு ரூபாய் கூட வீட்டுக்கு அனுப்ப முடியவில்லையே என நண்பர்களிடம் குமரேசன் புலம்பியுள்ளார்.

இந்த நிலையில், ஆயுத பூஜை விடுமுறைக்காக இவரது அறை  நண்பர்கள் அனைவரும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். குமரேசன்  மட்டும் ஊருக்குச் செல்லாமல் சென்னையிலேயே  தங்கியிருந்தார். நேற்றிரவு, குமரேசனின் நண்பர்கள் விழுப்புரத்திலிருந்து சென்னை திரும்பினர். பெரம்பூரில் தாங்கள் வசிக்கும் அறைக்குச் சென்றபோது , குமரேசன் தூக்கில் பிணமாகத் தொங்கியதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு, தகவல் அறிந்த செம்பியம் போலீசார்  குமரேசனின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் குமரேசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது...

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து அடுத்தடுத்து தற்கொலைகள் நடைபெறும் நிலையில், நாசகார சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைப் போன்று அப்பாவி இளைஞர்களின் பணத்தைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், உயிரையும் பறிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று பரவலாக எழுந்துள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments