எல்லாம் கிருப.. கிருப.. ரூ.57 லட்சம் ஸ்வாகா சி.எஸ்,ஐ பாதிரியார் கைது..! நீட் தேர்வில் வென்ற மாணவரிடம் மோசடி

0 66870
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவ சீட் பெற்றுதருவதாக கூறி நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரின் தந்தையிடம் 57 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் சி.எஸ்.ஐ தேவாலய பாதிரியாரும், அரசியல் கட்சி பிரமுகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மருத்துவ சீட் பெற்றுதருவதாக கூறி நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரின் தந்தையிடம் 57 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் சி.எஸ்.ஐ தேவாலய பாதிரியாரும், அரசியல் கட்சி பிரமுகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காரணை புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்ஜினியர் சீனிவாசனின் மகன் ஈஸ்வர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தன் மகனை, வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்த்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சீட் கேட்டுள்ளார் சீனிவாசன். ஆனால் சி.எம்.சி நிர்வாகம் தேர்வு மூலமே மாணவர்களை தேர்வு செய்வதாக கூறி சீட் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேர்வழியில் தனது மகனுக்கு சீட் கிடைக்காது என்பதை உணர்ந்த சீனிவாசனிடம், வேலூர் சி.எஸ்.ஐ தேவாலய பாதிரியார் சாய்நாதபுரம் சாது என்கின்ற சத்தியராஜை பிடித்தால் உங்களுடைய மகனுக்கு டாக்டர் சீட் கன்பார்ம் என்று , சி.எம்.சி யில் வேலை பார்க்கும் சிலர் குறுக்கு வழி யோசனையை தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ பாதிரியார் சாது சத்தியராஜை சந்தித்த சீனிவாசன் "தன் மகனுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை , சி.எம்.சி.யில் டாக்டர் சீட் வாங்கிக்கொடுக்கும்படி மன்றாடியதாக கூறப்படுகின்றது.

பாதிரியார் சாது சத்தியராஜோ விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் தேவக்குமார் மற்றும் அவரது தம்பி அன்பு கிராண்ட் ஆகியோரை சென்று சந்திக்குமாறு கூறி அனுப்பியுள்ளார்.

பாதிரியார் கூறியதை கேட்டு சீனிவாசனும் தேவாகுமாரையும் அவரது தம்பி அன்பு கிராண்டையும் சந்தித்துள்ளார். அவர்களோ, 20 நாட்களில் 57 லட்சம் ரூபாய் கொடுத்தால் உங்கள் மகனுக்கு டாக்டர் சீட் கன்பார்ம் என்று அவர்கள் ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.

தனது மகனுக்கு மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், சீனிவாசன் மூன்று தவணையாக வங்கி கணக்கு மூலமாகவும் நேரடியாகவும் அவர்களிடம் 57 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட தேவக்குமார் 2017 -ம் ஆண்டு டாக்டர் சீட் வாங்கிராதாமல் இழுத்தடித்து 2018-ம் ஆண்டு கண்டிப்பாக வாங்கி தருவதாக நம்ப வைத்துள்ளார். ஆனால் 2018 ஆண்டும் சீட் வாங்கித்தராததால் பணத்தை திருப்பிக் கேட்ட போது 2019- ம் ஆண்டு நிச்சயம் கிடைத்துவிடும் என்று சமாளித்துள்ளனர். ஆனால் அப்போதும் மருத்துவ சீட் வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் பணத்தை திருப்பிக்கேட்ட போது திருப்பி தருவதாக சொல்லி இழுத்தடித்து வந்துள்ளனர். தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த சீனிவாசன், பாதிரியார் சாது சத்யராஜை சந்தித்து அடிக்கடி தனது பணத்தை திரும்ப கேட்டு நச்சரித்துள்ளார் .

இதனால் ஆத்திரம் அடைந்த பாதிரியார் உள்ளிட்ட மூவரும் பணத்தை கொடுக்க முடியாது என்றும் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால் கதையை முடித்து விடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பாதிரியார் உள்ளிட்ட 3 பேரின் மருத்துவ சீட் மோசடி குறித்து சீனிவாசன் புகார் அளித்தார். காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாரின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையில் பாதிரியார் சாது சத்யராஜ், தேவகுமார், அன்பு கிராண்ட் ஆகியோர் 57 லட்சம் ரூபாய் பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 மூன்று பேர் மீதும் நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டனர்.

வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரி பெயரில் புரோக்கர்கள் சிலர் தொடர்ச்சியாக இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வருவதால் மாணவர்களின் பெற்றோர் குறுக்கு வழியில் மருத்துவ சீட் பெற்று தருவதாக கூறுவோரை நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments