நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு கண்கலங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி

0 2384
நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு கண்கலங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி

நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு காரணமாக மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு பட்டியலை தாமதப்படுத்த முடியுமா என்று கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண் கலங்கியுள்ளார். 

மருத்துவ இடங்களில் 7.5 விழுக்காடு இடங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான முடிவு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அரசு நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும், இந்த கல்வி ஆண்டிலேயே, அரசுப் பள்ளி மாணவர்கள் அதனை பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைக் கேட்ட நீதிபதிகள், அதிகாரிகள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ஆதரித்துள்ளனர் என்றும் கூறினர். உள் ஒதுக்கீடு தொடர்பான சட்டமசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ள நிலையில், விரைந்து முடிவெடுக்குமாறு நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு, முடிவெடுக்க ஒரு மாத காலம் போதாதா? எனக் கேட்ட நீதிபதிகள், முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் முடிவெடுத்து என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பினர்.

உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம்பெறுவது அதிகரிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். விசாரணைக்கிடையே, கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments