உயிருக்கு போராடிய அண்ணனை..பிரீசர் பாக்ஸில் வைத்த கொடுமை..! தம்பியிடம் இருந்து மீட்டு சிகிச்சை

0 14002

சேலத்தில் ஓய்வு பெற்ற ஹூண்டாய் நிறுவன மேலாளர் ஒருவர், வலிப்பு நோய் வந்து உயிருக்கு போராடிய வயது முதிர்ந்த தனது அண்ணனை இறந்து விட்டதாகக் கூறி குளிர்பதனப் பெட்டியில் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

சேலம் கந்தம்பட்டியில், பழைய ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். ஹூண்டாய் கார் கம்பெனியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது அண்ணன் பாலசுப்ரமணிய குமார் இறந்து விட்டதாகக் கூறி திங்கள் கிழமை இரவு குளிர்பதனப் பெட்டிக்காக தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து குளிர்பதனப்பெட்டி பணியாளர்கள், சரவணன் வீட்டிற்கு வந்து குளிர்பதனப் பெட்டியை வைத்துவிட்டு மறுநாள் வருவதாகக் கூறிச் சென்றுள்ளனர். அதன்படி செவ்வாய்கிழமை மதியம் குளிர்பதனப் பெட்டியைத் திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள், அந்தப் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு துடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்து வீட்டாரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது முதியவர் குளிர்பதனப் பெட்டிக்குள் இரவு முழுவதும் உயிரோடு இருப்பது தெரியவந்தது, இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சத்தம்போட்டபோது, தனது அண்ணன் இறந்து விட்டதாகவும் அவரது ஆத்மா மட்டும் இழுத்துக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.

அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த சூரமங்கலம் காவல்துறையினர், குளிர்பதனப் பெட்டிக்குள் துடித்துக் கொண்டிருந்த முதியவர் பாலசுப்ரமணிய குமாரை மீட்டு, 108 ஆம்புலன்சில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலசுப்ரமணிய குமார் வலிப்பு நோய் வந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை இறந்துவிட்டதாகக் கூறி சடலங்களை வைக்கும் குளிர்பதனப் பெட்டியை வரவழைத்து, பெட்டிக்குள் அவரை தூக்கி அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. குளிர்பதனப்பெட்டியை எடுக்க வந்த தொழிலாளர்கள், பெட்டிக்குள் இருப்பவர் உயிரோடு உள்ளதாகக் கூறி, கேள்வி எழுப்பியபோது, இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவார் என்று கூறி அவர்களை திரும்பி அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

உடல் நலம் பாதிக்கப்பட்ட அண்ணனை மருத்துவமனையில் சேர்க்காமல் சடலங்களை வைக்கும் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்து அடைத்து, இறப்புக்காக காத்திருந்த அவரது சகோதரரின் செயல், கடைசி காலத்தில் கவனிக்கப் பொறுப்பான உறவுகளும், கண்ணீர் சிந்த சொந்தங்களும் இல்லையென்றால் மனித வாழ்க்கை இவ்வளவுதான் என்பதை சமூகத்துக்கு சற்று அழுத்தமாக உணர்த்துவதாக உள்ளது.

இச்சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து பாலசுப்பிரமணிய குமாரின் சகோதரர் சரவணன் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் (287 பிரிவு) அஜாக்கிரதையாக செயல்படுதல், மூச்சுத் திணறலை (336) ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநிலை பாதித்தவர் போல சரவணனின் செயல்பாடு இருப்பதாகவும், அதுகுறித்தும் போலீசார் விசாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments