தஞ்சை தரணியில் வீதியில் கிடக்கும் 10 ஆயிரம் டன் நெல்..! காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை

0 3059
தமிழகத்தின் உணவுக்களஞ்சியமான தஞ்சை தரணியில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதால் 10 ஆயிரம் டன் நெல் பாதுகாப்பின்றி வீதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகம் என காரணம் காட்டி நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கும் அவலம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தமிழகத்தின் உணவுக்களஞ்சியமான தஞ்சை தரணியில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதால் 10 ஆயிரம் டன் நெல் பாதுகாப்பின்றி வீதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகம் என காரணம் காட்டி நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கும் அவலம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சோழ நாடு சோறுடைத்து என்ற வைரவரிகளுக்கு ஏற்ப இன்றும்... நம் நாட்டில் உள்ளோர் சோற்றில் கைவக்க தஞ்சை தரணியில் உள்ள விவசாயிகள் சேற்றில் கால்வைத்து நெல் உற்பத்தி செய்து வருகின்றனர்.

மத்திய அரசின் இந்திய உணவு கழகத்திற்கு முகவராக செயல்படும், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபகழகம், நெல்லை கொள்முதல் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ கொள்முதல் 30 ந்தேதி வரை நடந்திருக்க வேண்டிய நிலையில், தேவையான அளவு நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாக கூறி முன் கூட்டியே 25 ந்தேதியே பெரும்பாலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டுவந்த 166 நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

8 ஆண்டுகளுக்கு பின்னர் சரியாக ஜூன் மாதம் திறக்கப்பட்ட மேட்டூர் அணையில் பாய்ந்தோடிய காவிரியின் பயனாய் இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் அமோக விளைச்சல் கிடைத்துள்ளது. குறுவை அறுவடையில் கிடைத்த நெல்லை, கொள்முதல் நிலையங்களில் டன்கணக்கில் குவித்து வைத்துள்ளனர்.

அவ்வபோது பெய்கின்ற மழையில் நனைந்து நெல்மணிகள் மீண்டும் முளைவிட்டு பயிராக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது

குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தற்போது வரை 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யாமல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அக்டோபர் 1ந்தேதி தொடங்கி இருக்க வேண்டிய இந்த ஆண்டுக்காண காரீப் பருவ நெல் கொள்முதலும் ஆரம்பிக்கப்படாததால் நெல்லை கொட்டி வைத்துவிட்டு திக் திக் மன நிலையில் காத்திருக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்

குறிப்பாக அம்மாப்பேட்டை, கொக்கேரி, சாலியமங்கலம், கா.கோவிலூர்,மருங்குளம்,வளாத்தா மங்களம் உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களின் முன்பு விவசாயிகள் நெல்லுடன் தவம் கிடக்கின்றனர்

அரசு நெல் கொள்முதலை நிறுத்தி விட்டதால் இனி தனியார் அரிசி ஆலை வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு விவசாயிகள் நெல்லை கொடுக்கும் நிலை ஏற்படுத்தி உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய நுகர்பொருள் வாணிபக்கழக உயர் அதிகாரிகள், இந்த ஆண்டுக்கு 166 கொள்முதல் நிலையங்களுடன் கூடுதலாக 60 கொள்முதல் சேர்த்து மொத்தமாக 226 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகள் கொண்டுவரும் சன்னரக நெல் குவிண்டாலுக்கு 1905 ரூபாயில் இருந்து 53 ரூபாய் உயர்த்தி 1958 ரூபாயாகவும், பொதுரக நெல் குவிண்டாலுக்கு 1865 ரூபாயில் இருந்து 1918 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டனர்.

விவசாயிகளுக்கு உயர்த்தி வழங்கப்பட உள்ள விலையை கணினியில் ஏற்றும் பணி நடந்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக நெல் கொள்முதல் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தனர்.

தண்ணீருக்காக உரிமைப் போராட்டம் நடத்தி, விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல்மணிகள் ஒவ்வொன்றும் விலைமதிப்பு மிக்கவை என்பதை உணர்ந்து அதிகாரிகள் விரைந்து நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments