110 பட்டதாரிகளிடம் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்..!

0 1858
விசாகபட்டினத்தில் இயங்கும் கடல்சார் கல்வி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 110 பட்டதாரிகளிடம் லட்ச கணக்கில் பணம் பறித்த, மோசடி தம்பதி உட்பட 5 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாகபட்டினத்தில் இயங்கும் கடல்சார் கல்வி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 110 பட்டதாரிகளிடம் லட்ச கணக்கில் பணம் பறித்த, மோசடி தம்பதி உட்பட 5 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சைலர்ஸ் மெரிடைம் அகாடமி என்ற கல்வி நிறுவனத்தில் பேராசிரியர், உதவி பேராசிரியர்,விரிவுரையாளர் அலுவலக உதவியாளர் என பல்வேறு பதவிகள் காலியாக இருப்பதாகவும், அதன் மூலம் பிற்காலத்தில் அரசின் கடல்சார் வேலைவாய்ப்புகளையும் பெற முடியும் என குறுஞ்செய்திகள், இணைய தளங்கள் மூலம் பொய் வாக்குறுதிகளை பரப்பியுள்ளனர்.

கல்வி நிறுவனமே விளம்பரம் செய்துள்ளது என்று நம்பி நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் மோசடி கும்பலை தொடர்பு கொண்டுள்ளனர். இந்தக் கல்வி நிறுவனத்தில் வேலையின் அடிப்படையில் ஆறாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்கவேண்டும் எனவும்,நேர்காணலின் போது செலுத்தினால் போதும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பித்தவர்களை நேர்காணலுக்காக விசாகப்பட்டினம் வரவழைத்து, அந்த கல்வி நிறுவனத்தை வெளியில் இருந்தே காண்பித்துவிட்டு, விசாகப்பட்டினத்திலேயே ஒரு சிறிய அரங்கை வாடைகக்கு எடுத்து, அந்த இடத்தில் நேர்காணல் போன்று நாடகத்தை நடத்திய கும்பல் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பணத்தை வசூலித்துக் கொண்டு தலைமறைவாகிட்டனர். நேர்காணல் முடிந்த பிறகு வேலைக்கான அழைப்பு கடிதம் வீட்டிற்கு வந்து சேரும் என கூறி அனைவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

நீண்ட நாட்களாகியும் வேலைக்கான அழைப்பு கடிதம் வராததால் சந்தேகமடைந்து விண்ணப்பித்தவர்கள் விசாரணை செய்ததில், விசாகப்பட்டினத்தில் உண்மையாக செயல்படும் செய்லர்ஸ் மெரிட்டைம் அகாடமி என்ற கல்வி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட 110 பேரும் சென்னை காவல் ஆணையரிடம் வீடியோ கால் மூலம் புகாரளித்தனர். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில், மோசடி கும்பல் திருச்சியில் பதுங்கி இருப்பதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி, கூடுதல் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையிலான தனிப்படை அங்கு விரைந்து சென்று, இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட மோகன்தாஸ் மற்றும் உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவி ராணி உள்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

சென்னை அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுபோன்று நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் கேட்கும்போது, வேலை தேடுபவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பாக தீவிர விசாரணை செய்தபின் விண்ணப்பிக்க வேண்டும் என போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

அரசு வேலை கிடைக்கும் என பொய் வாக்குறுதி அளித்து பணத்தை வசூல் செய்து வேலை அளிப்பதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments