புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

0 2107
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் அருகே கீழஅம்பி பகுதியில் இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய மு.க. ஸ்டாலின், ஏழைத்தாயின் மகன் என்று கூறும் பிரதமர் மோடி இந்தியர்களை ஏழைகளாக்கி வருகிறார் என்றும், விவசாயி என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், ஆதலால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திமுக மட்டும் எதிர்க்கவில்லை என்று கூறிய மு.க. ஸ்டாலின், விவசாயிகளுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக கூறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஷிரோன்மணி அகாலிதளம் வெளியேறியுள்ளது என்றார்.

முன்னதாக ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த மு.க.ஸ்டாலின்,  அப்பகுதியில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர்களிடம் வேளாண் சட்டங்களால் நேரிடும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதன்பின்னர் விவசாய நிலத்தில் இறங்கி நடந்து சென்ற அவர், அங்கு பணிபுரிந்த பெண்களிடமும் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்,  விவசாயிகளின் தற்கொலையை மத்திய - மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோசங்களை எழுப்பினர். 

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  திமுக முதன்மை செயலாளர்  கே என் நேரு  தலைமையில்  கூட்டணி கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டு, மத்திய , மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள திமுக அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன், சேலம் தொகுதி எம்பி எஸ். ஆர் பார்த்திபன் உள்ளிட்டோரும் திமுக கூட்டணி கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் தலைமை தாங்கினார். இதில் கடலூர் தொகுதி எம்பி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர் பங்கேற்று, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும்,  அதிமுக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

திருவண்ணாமலையில் அண்ணா சிலை முன்பு முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான   ஏ.வ.வேலு தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 300 க்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் கலந்து கொண்டு,  மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

கோவை மாவட்டத்தில்  5 இடங்களில் திமுக கூட்டணி  சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாச்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ((கொ.ம.தே.க )) பொது செயலாளர்  ஈ.ஆர். ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.  

வேலூரில் 8 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. அண்ணா கலை அரங்கம் அருகே  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  பேசிய திமுக பொதுச் செயலாளர்  துரைமுருகன் , மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குழப்பமானவை என்றும், அது முறையாக கொண்டு வரப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 

நாமக்கல்லில் அண்ணா சிலை அருகே திமுக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.பி. சின்ராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கரும்பு தோகைகள் உள்ளிட்ட வேளாண் பயிர்களுடன், பூச்சி மருந்து தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் கருவிகளுடனும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த  200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதை திரும்பப் பெறக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.  

திருச்சியில் சஞ்சீவ் நகர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  வயலில் இறங்கி திருவரம்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ  அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மாணவர் அணியினருடன்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வயல் பகுதியை சுற்றிலும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால்  ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments