பரிகாரம் செய்து பப்ஜியை மீட்ட வில்லெஜ் பாய்ஸ்..! என்ன ஒரு புத்திசாலித்தனம்

0 6755
மத்திய அரசால் தடை செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படும் பப்ஜி செயலியை கிராமத்து சிறுவர்களே எளிதாக பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பணம் கட்டும் அளவுக்கு பப்ஜிக்கு அடிமையாகி கிடக்கும் நம்ம ஊரு சிறுவர்களின் விபரீத விளையாட்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

மத்திய அரசால் தடை செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படும் பப்ஜி செயலியை கிராமத்து சிறுவர்களே எளிதாக பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பணம் கட்டும் அளவுக்கு பப்ஜிக்கு அடிமையாகி கிடக்கும் நம்ம ஊரு சிறுவர்களின் விபரீத விளையாட்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

இந்தியர்களின் தகவல்களை திருடும் செல்போன் செயலிகளை களையெடுப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. அந்தவகையில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி பல்வேறு சமூக வலைதளங்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டுக்குள்ளான டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட சீன நாட்டு செயலிகள் தடை செய்யப்பட்டது. இதையடுத்து கூகுள் பிளேஸ்டோரில் இருந்து இந்த செயலிகள் உடனடியாக நீக்கம் செய்யப்பட்டன

அதன் தொடர்ச்சியாக பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடங்கி பலரது நேரத்தையும் காலத்தையும் வீணடிப்பதோடு, மன ரீதியான பாதிப்பை உண்டாகி வந்த பப்ஜி என்ற விளையாட்டு செயலிக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்தது.

இதனால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டது. இந்தியாவில் இனி எவரும் பப்ஜி விளையாட இயலாது என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தமிழகத்தில் கடைகோடியில் உள்ள கிராமத்து சிறுவர்களே எளிதாக பல்வேறு மாற்று இணையதளங்களை பயன்படுத்தி பப்ஜியை பதிவிறக்கம் செய்து எந்த வித தடையும் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து சுதந்திரமாக பப்ஜி விளையாடி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளிக்கூடம் என்று ஒன்றிருப்பதையே மறந்து ரிலாக்ஸாக பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம், பப்ஜிக்கு தான் தடை போட்டாகிவிட்டதே எப்படி விளையாடுகிறீர்கள் என்று கேட்டால் ?

7 ஆம் வகுப்பு பாசான ஜெண்டில்மேன் செந்தில் போல பப்ஜியை மீட்டுக் கொண்டு வந்த கதையை எளிதாக கூறிவிட்டனர். apk பியூர் என்ற ஆப்பை இன்ஸ்டால் செய்தால் போதும், தடை செய்த பப்ஜி மட்டுமல்ல சேர் இட் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளாம்ண்ணே என்று கெத்தாக சொல்கின்றனர்..!

ஒரு வேளை அந்த ஆப் கை கொடுக்காவிட்டால் taptop என்ற செயலி மூலமும் பப்ஜியை மீட்டுக் கொண்டு வந்து விடலாம் என்றும் பரிகாரம் தெரிவித்தனர் அந்த ஆப் டவுசர்ஸ் அறிவாளிகள்.

ஒரு செல்போனில் பப்ஜியை டவுன்லோடு செய்து , அதனை சேர் இட் மூலம் 5க்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொண்டு விளையாடி மகிழ்வதாக தெரிவித்த சிறுவர், எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்று அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவருக்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார்.

பப்ஜியில் திளைத்திருக்கும் இவர்களை போன்ற பப்ஜி அடிமைகளுக்கு இறுதியில் சிக்கன் டின்னர் கிடைக்கிறதோ இல்லையோ பெற்றோர்களின் பாக்கெட்டில் இருந்து பணம் கரைய தொடங்கி இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

பப்ஜியில் தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை, தலைகவசங்கள், உபகரணங்களை வாங்குவதற்கு என்று கிராமத்து ஆட்டக்காரர்கள் நூற்றுக் கணக்கில் செலவழித்தால், நகரத்து ஆட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் பணத்தை இழப்பதும் தெரியவந்துள்ளது. சிலர் தங்கள் பப்ஜி விளையாட்டை யூடியூப்பில் நேரலை செய்து சம்பாதிக்கும் புத்திசாலிகளாக வலம் வருகின்றனர்.

டிக்டாக், ஹலோ போன்ற செயலிகளை நீக்கியதை போல இந்தியன் சர்வரில் இருந்து நிரந்தரமாக பப்ஜியை நீக்கும் வரை அதனை ஏதாவது ஒரு வழியில் பதிவிறக்கம் செய்து நம்மவர்கள் விளையாடுவது தொடரவே செய்யும். பப்ஜி தடை என்பது கண்ணாமூச்சி விளையாட்டாகவே இருக்கும்

கிராமத்து சிறுவர்கள் மறந்து போன கபடி, கில்லி தாண்டு வரிசையில் கால் பந்து, கிரிக்கெட்டையும் உடல் வலிமையை தரும் ஆரோக்கியமான அத்தனை விளையாட்டுக்களையும் கூடியவிரைவில் இந்த பப்ஜி மறக்கடித்து விடும் என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments