மூச்சே விடாமல் பாடிய பாடும் நிலா... மூச்சை நிறுத்தினார்! - எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நிறைவேறாத அந்த ஆசை

0 14857
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று நம்முடன் இல்லை. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே தன் குரலால் சொக்க வைத்த எஸ்.பி.பி. உயிருடன் இல்லை என்பது இன்றைய துயரச் செய்தியாக அமைந்து விட்டது. எஸ்.பி.பி. வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்...

கடந்த 1946 - ம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூரில் எஸ்.பி. சம்பமூர்த்தி - சகுந்தலாமா என்பவர்களுக்கு மகனாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்தார். தந்தை எஸ்.பி. சம்பமூர்த்தி ஒரு ஹரிகாதா கலைஞராக பல நாடகங்களில் நடித்துள்ளார். இவருக்கு பாடகர் எஸ்.பி. சைலாஜா உட்பட இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் உண்டு.

பொறியியல் படித்த போது இசை சம்மந்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த 1964 ஆம் ஆண்டில், சென்னையை தளமாகக் கொண்ட தெலுங்கு கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த அமெச்சூர் பாடகர்களுக்கான இசை போட்டியில் முதல் பரிசை வென்றார். எஸ்.பி. பி. இசை போட்டியில் வென்ற முதல் பரிசு இதுதான்.

1966 - ம் ஆண்டு, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமன்னா எனும் தெலுங்கு திரைப்படத்தில் தான் எஸ்.பி.பி முதல் முறையாகப் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியோடு இணைந்து, ஹோட்டல் ரம்பா என்ற தமிழ் திரைப்படத்தில் ’அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடல் தான் எஸ்.பி.பி பாடிய முதல் தமிழ் பாடல். ஆனால்,ஹோட்டல் ரம்பா படம் வெளியாகவில்லை.

அதன்பிறகு, சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் ‘இயற்கையெனும் இளையகன்னி’ பாடலை எஸ்.பி.பி பாடினார். ஆனால், அந்தப் படம் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படம் வெளியாகி, எஸ்.பி.பி. பாடிய ’ஆயிரம் நிலவே வா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

பிறகு, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி மற்றும் ஜெய்சங்கர் படங்களில் சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் மற்றும் ஜானகி ஆகியோருடன் இணைந்து எம்.எஸ்.வி இசையில் தொடர்ச்சியாக பல பாடல்களைப் பாடியுள்ளார். அதன்பிறகு, 1970 - ம் ஆண்டுகளில் இளையராஜா, எஸ்.பி.பி மற்றும் ஜானகி ஆகியோர் இணைந்த வெற்றிக்கூட்டணி உருவானது.

image


கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘சங்கராபரணம்’ என்ற தெலுங்கு திரைப்படம் தான் எஸ்.பி.பியின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. 1980 - ம் ஆண்டு, முழுக்க முழுக்க இசையை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 10 பாடல்களில் 9 பாடல்களை எஸ்.பி.பி தான் பாடியிருந்தார். கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்காமல், இந்தப் படத்தில் சிறப்பாக பாடியிருந்தது எஸ்.பி.பிக்கு பெரும் புகழைச் சேர்த்தது. இந்தப் படத்தில்தான் எஸ்.பி.பி முதன் முதலில் தேசிய விருதைப் பெற்றார். இந்த பாட்டுக்காக தான் எவ்வளவு கஸ்டப்பட்டு பாடல்களை படித்தேன் என்பதை எஸ்.பி.பி.யே ஒரு முறை விளக்கியது போது , ரசிகர்கள் பிரமித்து போனார்கள்.

1981 - ம் ஆண்டு பாலசந்தரின் இயக்கத்தில் லக்ஷ்மிகாந்த் பியாரேலால் இசையில் வெளியான ஏக் துஜே கேலியே ஹிந்தி திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்காக எஸ்.பி.பி பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. தொடர்ந்து , மைனே பியார் கியா படத்தில் சல்மான் கானுக்காக பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ’தில் தீவானா’ என்ற பாடலைப் பாடியதற்காக பிலிம்பேர் விருதை எஸ்.பி.பி. பெற்றார். அதேபோல், சாஜன் மற்றும் ஹம் ஆப்கே ஹைன் கோன் பட பாடல்களும் இந்தியாவில் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகின.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் எஸ்.பி.பி. இந்திய அரசு 2001 - ம் ஆண்டு எஸ்.பி.பி- க்கு பத்மஸ்ரீ விருதையும் 2011 - ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் வழங்கி சிறப்பித்துள்ளது.

இதுவரை, நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் நான்கு மொழிகளில் பாடி ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

image

பின்னணிப் பாடகராக மிளிர்ந்ததோடு மட்டுமல்லாமல் 40 - க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் எஸ்.பி.பி. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகப் பின்னணி இசை அமைத்துள்ளார். கேளடி கண்மணி என்ற படத்தில் மண்ணில் இந்த காதல் என்ற பாடலை மூச்சு விடாமல் பாடி பிரமிக்க வைத்தார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் .இளையராஜா, ஹம்சலேகா, எம். எஸ். விஸ்வநாதன், தேவா என தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களின் பல மெலோடி பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பி. பெரும்பாலும் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் அறிமுக பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1981- ம் ஆண்டு கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் 21 பாடல்களைப் பாடி சாதனை படைத்தார். தமிழ் மொழியில் ஒரே நாளில் 19 பாடல்களையும்; இந்தி மொழியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் எஸ்.பி.பி பாடி சாதனை படைத்துள்ளார்.

முதல் மரியாதை’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாவித்ரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு பல்லவி என்ற மகளும் எஸ்.பி.பி சரண் என்ற மகனும் உள்ளனர்.

ரஷ்யா தவிர உலகின் முக்கிய  நாடுகள் அனைத்துக்கும் எஸ்.பி.பி. சென்று வந்துள்ளார். கடைசி வரை ரஷ்யாவுக்குச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் எஸ்.பி.பிக்கு இருந்தது. ஆனால், அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments