பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு..!

0 2210

டெல்லியில் நேற்று காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.

மூளை அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டது. கடந்த சில நாள்களாக அவர் கோமா நிலையில் இருந்து வந்த சூழலில் திங்கள்கிழமை மாலை காலமானதாக அவரது மகன் அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.

பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் காலை 9.15 முதல் 10.15 வரை முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ராஜாஜி மார்க்கில் அவரது உடல் பொதுமக்கள் மரியாதை செலுத்த ஒரு மணி நேரம் வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அவரது உடல் ராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் எடுத்துச் செல்லப்படும் என்றும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை ஒட்டி நாடு முழுவதும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 6 ஆம் தேதி வரை, அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும், எந்த விதமான அரசு கொண்டாட்டங்களும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments