ஆயுதங்களுடன் பாஜகவில் சேர வந்த ரவுடிகள்... போலீசில் சிக்கி கம்பியெண்ணும் பரிதாபம்!

0 22210
பாஜகவில் சேர வந்த ரவுடிகள்

செங்கல்பட்டு மாவட்டம்  வண்டலூர் அருகே பாஜக நலத்திட்ட நிகழ்ச்சிக்கு, கட்சியில் இணைவதற்காகக் கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி விரிவு பகுதியில் கோவிட் - 19 நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாவட்ட செயலாளர் மற்றும் பிற பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மளிகை சாமான் உள்ளிட்ட நிவாரணம் பொருள்களை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகும் சந்தேகப்படும்படி அந்தப் பகுதியில் சிலர் சுற்றித் திரிந்ததைப் போலீசார் பார்த்துள்ளனர்.. அந்த நபர்களை அழைத்த போலீசார் அவர்களின் வாகனத்தைச் சோதனை செய்தனர். அப்போது கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் வந்திருந்தது தெரிந்தது. அவர்கள் அனைவரையும் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. ரவுடி சூரியா தப்பிவிட மற்றவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்கள் போலிசாரிடம், “நாங்கள் பாஜக கட்சியில் சேர வந்தோம். நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் போலீசார் இருந்ததால் பயத்தினால் அங்கு செல்லவில்லை” என்று கூறியுள்ளனர். போலிசாரிடம் சிக்கிய ஆறு ரவுடிகள் மீதும் ஏதாவது வழக்குகள் பதியப்பட்டுள்ளதா என்று அருகிலுள்ள காவல் நிலையங்களில் விசாரித்து வருகின்றனர் ஓட்டேரி போலீசார்.

பாஜக-வில் இனைய வந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்ததையொட்டி ஓட்டேரி காவல் நிலையத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் திரண்டனர்... இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments