தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

0 11143
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். 

தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா, விலக்கிக் கொள்ளப்படுமா, கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா, இ-பாஸ் முறை தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கோவிட் நோய்த்தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அரசு சுமார் 7,162 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் கூட, இதுவரை 42 புதிய தொழில் திட்டங்கள் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம், சுமார் 31,464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69,712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் மருத்துவர்கள் அளிக்கும் பரிந்துரைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ஊரடங்கு, கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments