முழுஊரடங்கால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்...

0 1946

கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிப்பதால் ஆடிப்பெருக்கையொட்டி வழக்கமாகப் பொதுமக்கள் நீராடும் துறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஒருசில இடங்களில் தடையை மீறி ஒருசிலர் ஆற்றில் நீராடினர். 

தமிழகத்தில் ஆடி 18ஆம் நாள் பொதுமக்கள் ஆற்றில் நீராடி ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஒருசில ஆண்டுகளில் ஆற்றில் நீர் இல்லாமல் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படும். இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதியே மேட்டூரில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் நீராடி மகிழ்வதற்குத் தேவையான தண்ணீர் இருந்தபோதும், கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் ஆற்றில் பொதுமக்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகக் காவிரியாற்றில் பொதுமக்கள் நீராடும் துறைகளில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் நீராடும் துறைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதிக்கு வரும் பொதுமக்களைக் காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி, கல்வடங்கம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் நீராடுவதைத் தடுக்கக் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆடிப்பெருக்கு களையிழந்து காணப்படுகிறது.

 ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். கொரோனா பரவலைத் தடுக்கப் பெரிய கோவில்களைத் திறக்கத் தடை நீடிப்பதால் இந்த ஆண்டு பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை.

ஈரோடு மாவட்டம் பவானியில் பவானி ஆறு காவிரியில் கலக்கும் கூடுதுறையிலும் சங்கமேஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் ஆற்றுக்குச் செல்லாமல் இருக்கத் தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் நீராடும் பவானிக் கூடுதுறை வெறிச்சோடிக் காணப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தவிட்டுப்பாளையத்தில் ஆடிப்பெருக்கையொட்டித் தடையை மீறி ஏராளமான பொதுமக்கள் காவிரியாற்றில் நீராடி முளைப்பாரியைத் தூவி வழிபாடு நடத்தினர்.

கரூர் மாவட்டத்தில் நெரூர், திருமுக்கூடலூர், மாயனூர் உள்ளிட்ட இடங்களில் காவிரி ஆற்றங்கரையில் தடுப்புகளை ஏற்படுத்திக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதையும் மீறி ஒருசிலர் ஆற்றில் நீராடிச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தளர்வற்ற முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட பூ மார்க்கெட்டில், ஏராளமானோர் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர். ஆங்காங்கே பூக்கடைகள், இறைச்சிக் கடைகளும் திறந்திருந்தன. விதிமீறலில் ஈடுபடுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

ஆடிப்பெருக்கில் காவிரியில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருச்சியில் முக்கொம்பிலும், திருவரங்கம் அம்மா மண்டபத்திலும் படித்துறைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

தஞ்சாவூர், கும்பகோணம் உட்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் ஆற்றில் நீராடத் தடை விதிக்கப்பட்டதால் படித்துறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டித் தடையை மீறி நீராடிப் பொதுமக்கள் வழிபட்டனர். இதையறிந்த காவல்துறையினர் அவர்களைக் கலைந்துபோகச் செய்ததுடன், ஆற்றுக்கு வந்தவர்களைத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஆடிப்பெருக்கு கொண்டாடக் குளத்திற்குச் சென்ற பெண்களைப் பேரூராட்சி அலுவலர்கள் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் புதுமணத் தம்பதியர் நீராடி, புத்தாடை அணிந்து, தாலிக் கயிற்றை மாற்றி வைத்தியநாத சாமி கோவிலில் வழிபட்டுச் சென்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெண்ணாடம் ஆகிய ஊர்களில் வெள்ளாற்றில் பொதுமக்கள் நீராடி வழிபட்டனர். கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் நீராடத் தடை விதித்ததால் படித்துறைகள் களையிழந்து காணப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments