' கடைசியில் 33 வருட கால போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது'-கொரோனாவால் பத்தாம் வகுப்பு பாஸானவர் மகிழ்ச்சி

0 9512

கடந்த 33 வருடங்களாக 10- ம் வகுப்பு பொது தேர்வில் ஆங்கில பாடத்தில் தோடர்ந்து தோல்வியடைந்து கொண்டிருந்தவர், கொரோனா காட்டிய கருணையால் பாஸாகியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் முஷீராபாத் பகுதியை சேர்ந்தவர் முகமது நூர்தீன். இவருக்கு தற்போது 51 வயதாகிறது. கடந்த 1987- ம் ஆண்டு அன்ஜூமன் அரசுப்பள்ளியில் 10- ம் வகுப்பு தேர்வு எழுதினார். எல்லா பாடத்திலும் பாஸான நூர்தீன் ஆங்கிலத்தில் மட்டும் தோல்வியடைந்தார். கடந்த 33 ஆண்டுகளாக ஆங்கில தேர்வில் பாஸாக சளைக்காமல் போராடிக் கொண்டிருந்தார்.  தொடர்ந்து தேர்வு எழுதியும் பாஸாக முடியவில்லை. இந்த ஆண்டு குறிப்பிட்ட நாளுக்குள் ஆங்கில தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிவிட்டார்.

இதனால், பொது பிரிவில் தேர்வு எழுத அனுமதி கேட்டிருந்தார். அப்படியென்றால், அனைத்து பாடங்களையும் மீண்டும் சேர்த்து எழுத வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதற்கு, ரூ. 3000 கட்டணமாக செலுத்த வேண்டுமென்று சொல்லப்பட்டது.நூர்தீனும் கடன் வாங்கி பணத்தை கட்டி தேர்வு எழுதி தயாராக இருந்தார். ஆனால், கொரோனா பாதிப்பால் அனைவரும் பத்தாம் வகுப்பு பாஸ் என்று தெலங்கானா அரசு அறிவித்து விட்டது. இதனால்,நூர்தீனும் இப்போது பாஸாகியுள்ளார்.

இது குறித்து நூர்தீன் கூறுகையில், '' ஒவ்வொரு வருஷமும் நான் ஆங்கில தேர்வு எழுதுவேன். 33,32 மாக்குகள் வரை எடுத்துருக்கேன். ஆனால், ஒரு முறை கூட பாஸானதில்லை. இந்த முறை, என் மகள் எனக்கு நன்றாக ஆங்கிலம் கற்று கொடுத்திருந்தாள். கையில் பணமில்லாததால் குறிப்பிட்ட காலத்துக்குள் என்னால் ஆங்கில தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியவில்லை. அதனால், ஆங்கில தேர்வு மட்டுமல்லாமல் மற்ற தேர்வும் எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். அதற்கும் தயாராகவே நான் இருந்தேன். அந்த காலத்திலேயே நான் பாஸாகியிருந்தால் போலீஸ், ரயில்வே என்று ஏதாவது ஒரு துறையில் வேலைக்கு சென்றிருப்பேன். இப்போது, அதற்கு வாய்ப்பு இல்லை'' என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

1987- ம் ஆண்டு எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியடைந்தாரோ அதே அன்ஜூமன் பள்ளியில்தான் நூர்தீன் காவலாளியாக பணி புரிகிறார் . மாதம் ரூ.8000 சம்பளம் வாங்குகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments