ஊரடங்கில் “உதவி” நாடகம்.. முதிய தம்பதியை ஏமாற்றிய சிறுவர்கள்..!

0 2232

நெல்லையில் தனியாக வசிக்கும் முதிய தம்பதிக்கு உதவி செய்வது போல் நாடகமாடி, அவர்களது ஏ.டி.எம் அட்டைகளைத் திருடி 3 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்து உல்லாசமாக ஊர் சுற்றி வந்த இரண்டு சிறுவர்கள் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டையில் சங்கரநாராயணனும் அவரது மனைவியும் தனியே வசித்து வருகின்றனர்.

சங்கரநாராயணன் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருவரும் முதியவர்கள் என்பதால் ஊரடங்கு நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் இரண்டு மகன்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போயுள்ளனர். காய்கறிகள் வாங்கித் தருவது, மளிகைப் பொருட்கள் வாங்கித் தருவது உள்ளிட்ட உதவிகளை செய்து வந்துள்ளனர். உதவி செய்கிறார்கள் என்பதற்காக இருவரையும் தங்களது வீட்டுக்குள் சுதந்திரமாக உலவ முதியவர்கள் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 18ஆம் தேதி தங்களது வீட்டில் இருந்த 2 ஏ.டி.எம் அட்டைகள் காணாமல் போய்விட்டதாகவும் அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து கணிசமாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசில் புகாரளித்துள்ளனர். விசாரணையில் இறங்கிய போலீசார், வங்கி பரிவர்தனையை ஆராய்ந்தனர். அதில் எந்ததெந்த தேதியில், எந்ததெந்த ஏடிஎம்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை சேகரித்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவர்கள் இருவரும் சிக்கினர்.

வயது முதிர்வால் ஏற்படும் மறதி காரணமாக ஏடிஎம் அட்டையின் ரகசிய குறியீட்டு எண்களை அதன் பின் பக்கத்தில் முதியவர்கள் எழுதி வைத்திருந்தது சிறுவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. வங்கிக் கணக்கில் இருந்து 3 லட்சத்து 29 ஆயிரத்தை எடுத்த சிறுவர்கள், விலையுயர்ந்த சைக்கிள்கள், விலையுயர்ந்த செல்போன்கள் என வாங்கி உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். மீதமுள்ள பணத்தை தெரிந்த ஒரு நபரிடம் கொடுத்து வைத்துள்ளதாக அவர்கள் கூறிய நிலையில், அந்த ஆசாமி யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தனியாக வசிக்கும் முதியவர்கள் தங்களுக்கு உதவி செய்வதாக வரும் நபர்களிடம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதையும், எக்காரணம் கொண்டும் ரகசிய எண்களை ஏடிஎம் அட்டைகளின் பின்புறமோ, பிறர் சுலபமாக கண்டுகொள்ளும் வகையிலோ எழுதி வைக்கக் கூடாது என்பதையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments