நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டியவருக்கு பணி வழங்காததால் சர்ச்சை

0 42520

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியருக்கு பணி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் மலேரியா நோய் தடுப்புப்பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர் வினோத்குமார். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீசை மேல் அதிகாரி முத்துரத்தினவேல் உத்தரவின்படி ஒட்டினேன். பின்னர் அதிகாரிகள் அந்த நோட்டீஸை அகற்ற உத்தரவிட்டனர். மேலதிகாரிகள் உத்தரவின் பேரில் நோட்டீசை அகற்றினேன்.

இதுதொடர்பாக மாநகராட்சி மண்டல அலுவலர் ரவிக்குமார் என்னிடத்தில் விசாரணை நடத்தினார். 'கமலஹாசன் வீட்டில் நோட்டீஸை ஒட்ட சொன்னது யார் ' என்று கேட்டார். அப்போது, என்னிடம் நோட்டீஸை ஒட்ட சொன்ன சுகாதார ஆய்வாளர் முத்துரத்தினவேல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் பெயரை சொன்னேன். விசாரணைக்கு முடிந்த பிறகு, 'நீங்கள் பணிக்கு செல்லலாம்' என்று விசாரணை அதிகாரி ரவிக்குமார் கூறினார்.

மறுநாள் வழக்கம் போல நான் பணியாற்றும் வார்டு எண் 123 ரிஜிஸ்த்ரரில் கையொப்பமிட சென்றேன். அங்கிருந்த சுகாதார ஆய்வாளர் , என்னை 15 நாள்கள் சஸ்பெண்ட் செய்திருப்பதாக சொன்னார். இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை இணை கமிஷனர் மது சூதன ரெட்டியிடம் புகாரளித்தேன். ஆனால், பலன் இல்லை. எனக்கு மூன்று மாதங்களாக பணி வழங்கவில்லை. என் வருமானத்தை நம்பியே குடும்பம் உள்ளது. அதிகாரிகள் செய்த தவற்றை மறைக்க என் மீது பழி போடுகின்றனர் '' என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு ) துரை ஜெயசந்திரன், மாநகராட்சி ஒப்பந்த பணியாளரை மீண்டும் பணியில் சேர்க்க மறுப்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க மாநகராட்சி கமிஷனருக்கு  உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments