பெற்றோரைக் கொன்ற தலிபான் தீவிரவாதிகள் - காத்திருந்து பழி வாங்கிய இளம்பெண்!

0 1857
காமர் குல்

பெற்றோரை  சுட்டுக்கொன்ற மூன்று தலிபான் தீவிரவாதிகளை ஏ.கே 47 துப்பாக்கியால் ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தான், கோர் மாகாணத்தில் கெரிவே என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் தான் 16 வயதான காமர் குல் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்தார். கெரிவே கிராமத்தை ஜூலை 17 - ந் தேதி 40 -க்கும் மேற்பட்ட தலிபான் பயங்கரவாதிகள் சூழ்ந்தனர். பின்னர் கிராம மக்களில் அரசுக்கு ஆதரவானவர்கள், அரசுக்குத் தகவல் அளிப்பவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், கிளர்ச்சிக்கு ஒத்துழைக்காதவர்கள் எனப் பலரையும் வீடு புகுந்து சுட்டுக் கொல்லத் தொடங்கினர். 

image

காமர் குல் வீட்டுக் கதவையும் தீவிரவாதிகள் தட்டினர். நள்ளிரவு நேரத்தில் கதவு படபடவென்று தட்டப்பட்டதைக் கேட்டு, காமர் குல்லின் தாய் கதவைத் திறந்துள்ளார். வீட்டுக்கு வெளியே ஆயுதங்களுடன் தலிபான் தீவிரவாதிகள் நிற்பதைப் பார்த்து பயந்து போன அவர் உடனடியாக கதவைச் சாத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த  தலிபான் தீவிரவாதிகள் கதவுக்கு வெளியே நின்றபடியே துப்பாக்கியால் சராமரியாக சுட்டுள்ளனர். குண்டடி பட்ட காமர் குல்லின் தாய் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

பின்னர், கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் காமர்குல்லின் தந்தையையும் சுட்டுக் கொன்றனர். காமர் குல் மற்றும் அவரது 12 வயது தம்பியான ஹபிபுல்லா ஆகிய இருவர் மட்டும் தீவிரவாதிகள் கண்ணில் படாதவாறு வீட்டுக்குள் ஒரு பகுதியில் ஒளிந்திருந்து தப்பித்தனர்.  பெற்றோரை கொன்றவர்களை பழி வாங்க வேண்டும் என்று தீர்மானித்தார் காமர் குல். தலிபான் தீவிரவாதிகளைத் தேடிச்சென்று தன் பெற்றோரைக் கொன்ற மூன்று தீவிரவாதிகளை ஏ.கே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பழிதீர்த்துள்ள சம்பவம் ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கையில் ஏ.கே 47 துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் காமர் குல்லின் படமும் தற்போது வைரலாகியுள்ளது.

“தாய் தந்தையரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனால், இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை மனதுக்கு சற்று அமைதியைத் தந்திருக்கும். துணிச்சலின்  அடையாளமாக மாறியுள்ளார் இந்தப் பெண்” என்று காமர் குல்லின் செயலைப் பல தரப்பினரும் பாராட்டிவருகிறார்கள்.

தற்போது, காமர்குல்லும் அவரது தம்பியும் கோர் மாகாணத்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments