திருப்போரூர் திமுக எம்எல்ஏ வீட்டில் மேலும் ஒரு துப்பாக்கி மற்றும் பயன்படுத்தப்பட்ட 50 தோட்டாக்கள் சிக்கின

0 4299
திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் வீட்டில் போலீசார் திடீர் சோதனை

திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மேலும் ஒரு துப்பாக்கி  மற்றும் பயன்படுத்தப்பட்ட 50 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தோட்டாக்களை திமுக எம்எல்ஏ எதற்கு பயன்படுத்தினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் கடந்த 11ஆம் தேதி துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில், திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இதயவர்மன் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, முதன்மை நீதிபதி வசந்தலீலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. நாளைய தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், எம்எல்ஏ இதயவர்மன் வீட்டில் மேலும் ஒரு துப்பாக்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில், போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று, எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில், மாமல்லபுரம் ஏ.எஸ்.பி சுந்தரவதனம் தலைமையில், திருப்போரூர் ஆய்வாளர் உள்ளிட்ட 20 போலீசார் சோதனை நடத்தினர். எம்.எல்.ஏ.வின் வீடு, குடோன் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை சுமார் இரண்டரை மணி நேரம் சோதனை நடைபெற்றது.

திடீர் சோதனையில், உரிமம் பெறாத துப்பாக்கி, 4 தோட்டாக்கள், 50-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், சுமார் 3 கிலோ எடையில் ரவை புல்லட்டுகள், தோட்டாக்கள் தயாரிப்பதற்கான கருவி மற்றும் ஈயம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை, போலீசார் திருப்போரூர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இரவு பகலாக எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
திமுக எம்எல்ஏ வீட்டில் பயன்படுத்தப்பட்ட 50 தோட்டாக்கள் மற்றும் ஒரு கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். அந்த தோட்டாக்களை திமுக எம்எல்ஏ எதற்கு பயன்படுத்தினார் என்பது கூட தெரியவில்லை என்றும், அவரிடம் மட்டும் தான் கள்ளத்துப்பாக்கி உள்ளதா, மேலும் எத்தனை திமுக எம்எல்ஏக்களிடம் கள்ளத்துப்பாக்கிகள் உள்ளன என தெரியவில்லை என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments