சாத்தான்குளம் அருகே... சிறுமி படுகொலை... பாலியல் வன்கொடுமை என முதல் தகவல் அறிக்கை

0 8040

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி காட்டுப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 2 இளைஞர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

சாத்தான்குளம் அடுத்துள்ள கல்விளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து ஏழு வயது மகள் மற்றும் ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அப்பெண்ணின் மகள், அதே தெருவில் உள்ள முத்தீஸ்வரன் என்ற இளைஞரின் வீட்டிற்கு டிவி பார்க்கச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியின் தாயார் அந்த வீட்டிற்குச் சென்று பார்த்த போது அங்கில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தாயார் பல இடங்களில் தேடிய நிலையில், அதே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில்கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்துச் சென்ற சாத்தான்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி டிவி பார்க்கச் சென்ற வீட்டைச் சேர்ந்த முத்தீஸ்வரன் என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பின்னர் நண்பன் நித்தீஷ் என்பவனை உதவிக்கு அழைத்து சிறுமியின் உடலை தண்ணீர் டிரம்முக்குள் அடைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டுச் சென்று காட்டுப் பகுதியில் வீசியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது.

இதையடுத்து, முத்தீஸ்வரன் மற்றும் நித்தீஷ் ஆகிய இருவர் மீது கொலை, கொடுங்காயம் ஏற்படுத்துதல், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சாத்தான்குளம் காவல் நிலைத்தில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் சிறுமியின் கழுத்து, உதட்டு பகுதியில் காயம் இருந்ததாகவும், முத்தீஸ்வரனும், நித்தீஷூம் கூட்டாக சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments