ஊரடங்கு படுத்தும் பாடு... கொரோனா பரிசோதனைக்காக லாரியை திருடிச் சென்ற நபர்

0 4617

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை செல்ல நள்ளிரவில் வாகனங்கள் எதுவும் கிடைக்காததால் லாரியை திருடிச் சென்ற போதை ஆசாமி கைது செய்யப்பட்டான்.

திருத்துறைப்பூண்டி உப்புகுளத் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், தனது லாரியை கடந்த 4ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடம் அருகில் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது லாரியை காணாது அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்தார். அன்று மதியமே லாரி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி பின்புறம் இருந்து மீட்கப்பட்டது.

மருத்துவமனையில் கிடைத்த விவரங்களை வைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், லாரியை திருடிச் சென்ற புளியங்குடியை சேர்ந்த ஓட்டுநரான அசோக் என்பவனை நேற்று கைது செய்தனர்.

சென்னையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த அசோக், சம்பவத்தன்று நள்ளிரவு அங்கிருந்து சரக்கு லாரிகள் மூலம் திருத்துறைப்பூண்டி வந்துள்ளான். நள்ளிரவு ஆகிவிட்ட நிலையில், அங்குள்ள உறவினர் ஒருவரை போனில் அழைத்து அவர்கள் வீட்டுக்கு வருவதாகக் கூறியுள்ளான். ஆனால் அசோக்கை கொரோனா பரிசோதனை செய்துகொண்டு வீட்டுக்கு வருமாறு உறவினர்கள் கூறியுள்ளனர்.

போதையில் இருந்த அசோக், கொரோனா பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளான். இரவு 12 மணி ஆவதால் பரிசோதனை செய்ய முடியாது என்று கூறி, திருவாரூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். திருவாரூருக்கு எப்படி செல்வது என்ற யோசனையோடு வெளியே வந்தவனின் கண்களில் அங்கு நின்றிருந்த ராமகிருஷ்ணனின் லாரி பட்டிருக்கிறது. அதனை நேக்காக திருடி திருவாரூர் எடுத்துச் சென்றுள்ளான்.

லாரியை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் பின்புறம் யாருக்கும் தெரியாதவாறு நிறுத்திவிட்டு மருத்துவமனை சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளான் அசோக் என்கின்றனர் போலீசார். பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை எனத் தெரியவந்தால் லாரியை சென்னை எடுத்துச் சென்று விற்றுவிடவும் அசோக் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments