ரூ.20 கோடியில் பன்னாட்டு மலர் ஏல மையம்.. முதலமைச்சர் அடிக்கல்..!

0 661
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 20 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 20 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா, ஜெர்புரா, கார்னேஷன் உட்பட 6 வகையான கொய்மலர் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வரும் நிலையில், 90 சதவீத மலர்கள் உள்ளூர் சந்தைகளுக்கும், 10 சதவீத மலர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மலர்களை சந்தைப்படுத்த ஏதுவாக ஓசூரில் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நெதர்லாந்து நாட்டில் உள்ளதை போல ஓசூரை அடுத்த மோரளப்பள்ளி பகுதியில் 7.75 ஏக்கர் பரப்பளவில் 20 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உலக தரம்வாய்ந்த பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பன்னாட்டு மலர் ஏல மையத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இதன் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த வியாபாரிகளுக்கும், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் மலர்களை நேரடியாக விற்பனை செய்ய முடியும். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட வளர்ச்சி திட்ட நிதிகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், அதிக காய்கறிகள் உற்பத்தி நடைபெறுவதால் பெங்களூர் போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் காய்கறி மண்டலம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், கொரோனா சூழலிலும் தொழிற்சாலைகள் நலனை கருத்தில் கொண்டு இயங்குவதற்கு தளர்வு அளிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே தொழிற்சாலைகளும் அங்கு பணி புரியும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் தொழிற்சாலைகளுக்கு தற்போதைய சூழலில் 150 கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், மேலும் கடனுதவி வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா ஏற்றுமதி மையம் அமைக்க வேண்டும் என்றும், உயர் மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுக்கு மின் கட்டணத்தில் சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments