30 ஆண்டுகளாக மலை கிராமங்களில் தபால்காரர் பணி

0 3293
காடு, மலை, யானை... இந்த மூன்றும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின் கிராமங்களில் உயிரைப் பணயம் வைத்து முப்பது ஆண்டுகளாக தபால்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சிவன் .

காடு, மலை, யானை... இந்த மூன்றும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின்  கிராமங்களில்  உயிரைப் பணயம் வைத்து முப்பது ஆண்டுகளாக தபால்காரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்  சிவன் . ஓய்வுக்கு பிறகும்  ஓய்ந்து விடாத சிவன்,  பழங்குடியின மக்களுக்கான பணியில் தன்னை  அர்ப்பணித்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்கான பின்னணி என்ன ?  இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.  

தபால் நிலையங்களையும் தபால்காரர்களையும் மக்கள் மறந்து விட்ட காலம் இது. ஆனால், தன் அயராத மக்கள் சேவையால், ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றதோடு, பழங்குடியின மக்களுக்கும் வழிகாட்டியாகவும் திகழ்கிறார் ஒரு தபால்காரர்.

குன்னூர் தபால் நிலையத்தில் தபால்காரராக பணி புரிந்தவர் சிவன். குன்னூரை சுற்றியுள்ள மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். எழுதவும், படிக்கவும் தெரியாத வெள்ளந்தியான இந்த மக்களுக்கும் உலகுக்குமான ஒரு இணைப்பு பாலமாக சிவன் இருந்து வந்தார்.

தபால் நிலையத்திலிருந்து தினமும் காலை 8 மணிக்கு புறப்படும் சிவன் நாள் ஒன்றுக்கு 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தபால்கள், மணியார்டர்களை பட்டுவடா செய்வார். வீடு திரும்பும் போது மாலை 6 மணியாகி விடும். தினமும் ஒரு முறையாவது காட்டு யானையை சிவன் எதிர்கொண்டும் விடுவார்.

மரப்பாலம் என்ற இடத்தில் ஒரு முறை ஒற்றை யானை சிவனை துரத்தியுள்ளது. அந்த யானையிடத்தில் இருந்து தப்பித்த விதத்தை சிவன் தத்ரூபமாக நம்மிடத்தில் நடித்து காட்டிய போது, சில்லிட்டு போனது. 

இப்படி, உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய சிவன் கடந்த மார்ச் 7- ந் தேதி 65- வது வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சிவன் தபால்காரராக பணியாற்றிய ஹில்குரோவ், ஆடர்லி , குரும்பாடி, மரப்பாலம் பகுதிகளுக்கு இன்னும் புதிய தபால்காரர் நியமிக்கப்படவில்லை. இதனால், பழங்குடியின மக்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஓய்வுக்கு பிறகு, சிவன் முதன்முறையாக தான் பணியாற்றிய கிராமங்களுக்கு நேற்று சென்றார். புதிய தபால்காரர் வரும் வரை , அவ்வப்போது கிராம மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட சிவன் முடிவு செய்துள்ளார்.  தனது கணவரின் முடிவு குறித்து பெருமைப்படுவதாக சிவனின் மனைவி கூறுகிறார்.

சிவன் ஓய்வு பெற்ற போது, நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர் சுப்பிரியா ஷாகு, 'மனிதர்கள் செல்ல முடியாத இடங்களுக்கு சென்று சேவை செய்தவர்' என வெகுவாக பாராட்டியிருந்தார். 'தேசத்தை கட்டியெழுப்புவதில் சிவனைப் போன்றவர்களின் பங்கு அளப்பறியது' என ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவனை வாழ்த்தியிருந்ததும் நினைவு கொள்ளத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments