'அப்போ மியூசிக் டீச்சர், இப்போ பிரியாணி மாஸ்டர்' - கொரோனாவால் வேலை இழந்த இசை ஆசிரியரின் துணிகர முடிவு!

0 4459

கொரோனா நோய்த் தொற்றானது பலரது வாழ்வாதாரத்தையும் பாதித்து வருகிறது. நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கானது பலரது தொழிலையும், வேலையையும் முடக்கியுள்ளது. பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வேலை இழந்த இசை ஆசிரியர் ஒருவர் கண்ணியம் பற்றிக் கவலைப்படாமல் பிரியாணி விற்கத் தொடங்கியுள்ளார். பலரும் இதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

கேரளாவில் உள்ள கொச்சியில் வசித்துவருகிறார், ராஜாராம். 55 வயதாகும் ராஜாராம் கொச்சி கலாபவன் இசைப் பள்ளியில் 11 வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பக்ரைன், ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கலாபவன் இசைப் பள்ளியின் கிளைகளுக்கும் சென்று பணியாற்றியிருக்கிறார். கொரோனா ஊரடங்குக்கு முன்பு நாடு நாடாகச் சென்று இசை பயிற்றுவித்த ராஜாராமின் நிலை கொரோனா ஊரடங்குக்கால் தலைகீழாக மாறியது.

அடுத்தடுத்து, ஆறு மாதங்களாகத் தொடரும் கொரோனா ஊரடங்கால் கலாபாவன் இசைப் பள்ளி திறக்கவே இல்லை. அதனால், வேலையை இழந்தார். வருமானம் இல்லாமல் போராடியவர் கண்ணியம் பற்றிக் கவலைப்படாமல், உடனே பிரியாணி மாஸ்டராக மாறி, பிரியாணி கடையைத் திறந்துவிட்டார்.

கண்ணியம் மிக்க இசை ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு பிரியாணி விற்கத் தொடங்கியது குறித்து, "ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு கண்ணியம் உண்டு. அதனால், பிரியாணி விற்கத் தொடங்கியபோது நான் வெட்கப்படவில்லை" என்று சமூகம் பற்றிக் கவலைப்படாமல் பதில் சொல்கிறார் ராஜாராம்.

தினமும், அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடும் ராஜாராம் தன் மனைவி சுலோச்சனாவின் உதவியுடன் வீட்டிலேயே பிரியாணியைத் தயார் செய்கிறார். பிறகு, காலை 9 மணிக்கெல்லாம் பிரியாணி விற்கத் தொடங்கி விடுகிறார். அரை பிளேட் பிரியாணி 60 ரூபாய்க்கும், ஃபுல் பிளேட் பிரியாணி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறார் ராஜாராம். ஒரே இடத்தில் கடை போட்டு விற்காமல், பல இடங்களுக்கும் சென்று பிரியாணி விற்கிறார். ஹோம் டெலிவெரியும் செய்கிறார்.

கன்னியமிக்க இசை ஆசிரியர் பணி போய்விட்டது என்று வீட்டுக்குள் இருந்து புலம்பாமல், தைரியமாக முடிவெடுத்து பிரியாணி விற்று வாழ்க்கையை நகர்த்த முடிவெடுத்துவிட்ட ராஜாராமைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments