கணிசமான வீரர்களை திரும்ப பெற்ற சீனா.. செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு..!

0 5105

கிழக்கு லடாக் எல்லையில், பாங்கோங்சோ ஏரியின் கரைகளில் Finger 4 பகுதியில் இருந்து, கணிசமான அளவில் வீரர்களை சீனா திரும்பப் பெற்றுள்ளது. பாங்கோங்சோ ஏரியில், சீன ராணுவத்தின் விரைவுப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்த படகுத்துறை, Finger 4 பகுதிக்கு கிழக்காக 10 கிலோமீட்டர் தூரம் இடம்மாறியுள்ளது தொடர்பான செயற்கைக்கோள் படங்களும் வெளியாகியுள்ளன.

கிழக்கு லடாக் எல்லையில், பாங்கோங்சோ ஏரியின் கரைகளில் முன்னர் சீன ராணுவத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததும், தற்போது அந்த கட்டுமானங்கள் இல்லாமல் இருப்பதையும் ஒப்பிட்டுக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், ஏப்ரல் மாதத்திற்கு முன்பிருந்த நிலைக்கு, சீன வீரர்கள் முழுவீச்சில் பின்வாங்கவில்லை என்றும், கூடாரங்கள், ஷெட்டுகள் இன்னும் உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சீனா மோதல் போக்கை விலக்கிக் கொள்ளத் தொடங்கியபோதிலும், இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பாங்கோங்சோ ஏரியில், சீன ராணுவத்தின் விரைவுப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்த படகுத்துறை, Finger 4 பகுதிக்கு கிழக்காக 10 கிலோமீட்டர் தூரம் இடம்மாறியுள்ளது. இருப்பினும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிற்கு உள்ளேயே இது இன்னும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படகுத் துறையில் இரண்டு வகையான 11 சீனப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், இந்த படகுத் துறைக்கு அருகில் கரைப் பகுதியில் மலை முகப்பில் சீன வரைபடமும் பொறிக்கப்பட்டுள்ளதாக, செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஃபிங்கர் 8 பகுதி வரை ரோந்து மேற்கொள்ள தங்களுக்கு உரிமை உள்ளதாக இந்திய தரப்பு தொடர்ந்து கூறிவரும் நிலையில், அதை சீனா சர்ச்சைக்கு உள்ளாக்குவதோடு, ஃபிங்கர் 4 பகுதியை தாண்டி இந்திய வீரர்கள் ரோந்து செல்வதை சீனப் படைகள் தடுப்பதே மோதல் ஏற்பட்டதற்கு காரணமாகும். இந்த ஃபிங்கர் 4 பகுதியில் கடந்த மே மாதத்தில் இருதரப்பு வீரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. கால்வன் பகுதியில் இரு தரப்பும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கியுள்ள நிலையில், அடுத்த வாரத்தில் லெப்டினென்ட் ஜெனரல் நிலையில் இருதரப்பு ராணுவ அதிகாரிகள் மீண்டும் சந்தித்து, மோதல் போக்கு எந்த அளவுக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதை மதிப்பிட உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments