ஆக்ஸிஜன் அளவு 90 சதவிகிதமானால் டேஞ்சர்! கொரோனாவுக்கு எப்படியெல்லாம் சிகிச்சை அளிக்கிறார்கள்? #covidprotocol

0 55447

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட் 19 (SARS-CoV-2 ) எனப்படும் கொரோனா நோய்க்கிருமி உலகம் முழுவதும் பரவி பெரும்  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை,  தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரோனா நோய் தொற்றுக்கு மருத்துவமனைகளில் என்னவிதமான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்கிற கேள்வி அனைவரிடத்திலும் தொக்கி நிற்கும். கொரோனா நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் , வைரஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் விதத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

காய்ச்சல், தொண்டை வலி, வறட்டு இருமல், சுவாசப் பிரச்னை உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் (SPO2)  அளவு கணக்கிடப்படும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எவ்வளவு ஆக்சிஜனை உடல் செல்களுக்கு எடுத்துச் செல்கிறது என்பத்தைக் கண்டறியும் பரிசோதனை இது. சாதாரணமாக, ஆரோக்கியமான ஒருவரின் உடலில் ஆக்சிஜனின் அளவு  95  முதல்  100 % இருக்கும். ஆனால், இந்த அளவு 94 % க்கும் கீழே குறைந்தால் பிரச்னை தான். நுரையீரலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். கொரோனா நோய் தோற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை எளிதாக அறிய உதவும் பரிசோதனை இது. உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தாலே உடல் சோர்வு ஏற்படும். படிக்கட்டுகள் ஏறும்போது அதிகளவு மூச்சு வாங்கும்.  

image

ஆனால், பி.சி.ஆர் பரிசோதனையே கொரோனா நோய்த் தொற்றை உறுதி செய்யும் துல்லியமான பரிசோதனை ஆகும். பி.சி.ஆர் சோதனையில் நோய் தொற்று உறுதியானதும், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவின் அடிப்படையில் கொரோனா நோயாளிகள் பிரிக்கப்படுகிறார்கள். ஆக்சிஜனின் அளவு 94 % க்கும் அதிகமாக இருந்தால் லேசான பாதிப்பு என்றும் 90 - 94 % ஆக இருந்தால் மிதமான பாதிப்பு எனவும் 90 % க்கும் கீழே குறைந்தால் அது மோசமான பாதிப்பு என்றும் வகைப்படுத்தப்பட்டு அதனடிப்படையில், தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா உறுதியானதும், மார்பக CT ஸ்கேன் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் நோயின் தீவிரத்தை அறிவதற்கு, நுரையீரல் பாதிப்பின் அளவை அறிந்துகொள்ள சி.டி.ஸ்கேன் பரிசோதனை உதவுகிறது.  CT ஸ்கேன் முடிவில் நுரையீரல் பாதிப்பு 25 % க்கும் குறைவாக இருந்தால் அவர்கள் லேசான பாதிப்பு என்றும் 25 - 75 % இருந்தால் மிதமான பாதிப்பு என்றும்  75 - 100 % பாதிக்கப்பட்டிருந்தால் மோசமான பாதிப்பு என்றும் கருதப்படுகிறது. பிறகு,  அதற்கேற்ற வகையில்  சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து, ரத்தத்தில் சி - ரியாக்டிவ் புரத அளவு, லிம்போசைட்டுகள் அளவு, ஃபெரிடின், லாக்டிக் ஆசிட் டீஹைட்ரஜனேஸ் டி - டைமர் ஆகியவற்றின் அளவு கண்டறியப்படும். இந்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அடுத்த கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா சிகிச்சைக்கு முன்பு செய்யப்படும் அடிப்படை பரிசோதனை முறை இவைதான்.

கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்களுக்கு  500 மில்லி கிராம்  பாராசிட்டமால் மாத்திரை தினமும் மூன்று முறை அளிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப இருமலைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வழங்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த 500 மி.கி விட்டமின் சி மாத்திரை ஒரு நாளைக்கு ஒரு முறையும், 50 மி.கி சிங்க் மாத்திரை ஒரு நாளைக்கு இரண்டு முறையும் கொடுக்கப்படும். ஒமெப்ரஸோல் மாத்திரை ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

image

இத்துடன் அவசியம் ஏற்பட்டால்,  லேசான மற்றும் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுக்கப்படுகிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பக்க விளைவை ஏற்படுத்தும் என்பதால் இதயநோய் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் விதமாக ஐந்து நாள்களுக்கு தினம் ஒரு முறை அசித்ரோமைசின் ஆன்டிபயாடிக் மாத்திரை கொடுக்கப்படுகிறது. மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு அசித்ரோமைசின் மாத்திரையுடன் செப்திரியாக்சோன் ஊசி போடப்படும். தீவிர பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அசித்ரோமைசின் மாத்திரை,யுடன் பிப்டஸ் ஊசி போடப்படுகிறது. இவை,  கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் சக்தியை உடலுக்கு வழங்கும்.கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் ரத்தம் கடினமாகி, ரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்க எதிர் ரத்தஉறைவு (Anticoagulation ) மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படும். ரத்த உறைவு ஏற்பட்டால் உடல் உறுப்புகள் செயல் இழக்கத் தொடங்கும். இதயப் பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்கவே எதிர் ரத்த உறைவு  மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் முதன்முதலில் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல் தான். நுரையீரலில் திரவம் அளவுக்கு அதிகமாக சூழ்ந்து மூச்சு விடுதலில் பிரச்னை ஏற்படும். அதன் காரணமாக ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் அதிகமாக மூச்சு வாங்கும். நிமிடத்துக்கு 30 முறைக்கும் மேலே மூச்சு விடுவோம். கொரோனா பாதித்தால் இயல்பாக மூச்சு விட முடியாது. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு 90% க்கும் மேலே எப்போதும் இருக்கும் படி கவனித்துக்கொள்கிறார்கள்.

image

இத்துடன் இயற்கையாகவே நுரையீரலில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தும் ப்ரோனிங் (Proning) முறையும் கடைபிடிக்கப்படுகிறது. மிதமான பாதிப்பு உள்ளவர்களுகு 30 - 120 நிமிடங்களுக்கு  ஒருமுறை பக்கவாட்டில், மல்லாக்க, குப்புற என்று மாறிமாறி நோயாளிகள் படுக்கவைக்கப்படுவர். அதிதீவிர பாதிப்புக்கு  உள்ளானவர்கள் ஒரு நாளைக்கு 16 - 18 மணி நேரம் குப்புறப்படுக்கவைத்து தான் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

கொரோனா வைரஸால் மிதமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே டிரையல் தெரபிக்களான ரெம்டெசிவிர், பிளாஸ்மா சிகிச்சை, லோபியாவிர் + ரீடோனாவிர் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் விதத்திலேயே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய்த் தொற்று அறிகுறிகள் மறையும் வரை மேற்கண்ட தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதி தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மீண்டும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும். குணமடைந்தவர்கள் வீடு திரும்பியதும் ஒரு வாரம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.  

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments