எனி டெஸ்க் விபரீதம்.. ரீசார்ஜ் கடையில் காமுக வில்லன்கள்..! தனியாக செல்லும் பெண்களே உஷார்

0 116821

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில், ரீசார்ஜ் செய்ய கடைக்கு சென்ற பெண்ணின் ஸ்மார்ட் போனில் எனி டெஸ்க் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் அவரது செல்போனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் பிரத்யேக கைபேசி எண்ணுக்கு அழைத்த ஏர்வாடியை சேர்ந்த பெண் ஒருவர் , தான் கணவரால் கைவிடப்பட்டவர் எனவும், ஏர்வாடி பகுதியில் உள்ள “ஏர்பாத் நெட் கபே” என்ற செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சென்று செல்போன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்து வந்த தான் ஒரு விபரீத சிக்கலில் மாட்டிக் கொண்டு விழிப்பதாக கூறியிருந்தார்.

அந்த கடையை நடத்திவரும் ஏர்வாடியை சேர்ந்த பாதுஷா, ஹாஜி மற்றும் ஊழியர் சகாபுதீன் ஆகியோர் தன்னிடம் நன்றாக பேச்சுக்கொடுத்து வீட்டில் இருந்த படியே ரீசார்ஜ்  செய்யலாம் என்பது போல ஆசைவார்த்தை காட்டி தனது ஸ்மார்ட் போனில் எனி டெஸ்க் (any desk) என்ற செயலியை பதிவிறக்கம் செய்ததாக கூறியுள்ளார்.

அதன் மூலம் ரீசார்ஜ் செய்வதாக கூறி, தன்னை ஏமாற்றி எனி டெஸ்க் செயலியின் அனுமதி எண்ணை பெற்று, அவர்களது கடையில் உள்ள மடிக்கணினி மூலம் தனது செல்போனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதில் இருந்த அந்தரங்க புகைபடங்களை பதிவிறக்கம் செய்து மிரட்டியதாகவும், சகாபுதீன் என்பவன் பயப்படவேண்டாம், திருமணம் செய்து கொள்கிறேன் என ஆறுதலாக வாக்குறுதி அளித்து ஒரு இடத்திற்கு வரவழைத்து பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காததால் தனது வீடியோவை தற்போது பல்வேறு நாடுகளில் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களிலும் பரப்பிவருவதாகவும் கதறியபடியே புகார் அளித்தார்.

இதையடுத்து இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், சைபர் குற்றபிரிவு உதவியுடன் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் யமுனா தலைமையில் தனிப்படை போலீசார் குற்றம் சாட்டப்பட்ட “ஏர்பாத் நெட் கபே” கடையில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் கடையின் உரிமையாளர் பாதுஷா ஊழியர் சகாபுதீன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் 1 மடிகணினி போன்றவை கைப்பற்றப்பட்டது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த மடிக்கணினியில் இருந்து ஏராளமான பெண்களின் வீடியோக்கள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. கணவர் வெளி நாட்டில் தங்கி வேலை பார்க்கும் நிலையில் தனிமையில் இருக்கும் பெண்கள் பணபரிமாற்றம் செய்ய சென்றால் அவர்களின் செல்போனில் எனி டெஸ்க் செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்து வீட்டில் இருந்தே உதவிக்கு அழைக்கலாம் என்று நம்ப வைத்து அவர்களின் செல்போனில் இருந்து அந்தரங்க புகைபடங்களையும் உரையாடல்களையும் திருடி அதன் மூலம் பெண்களை மிரட்டி ஆபாசபடம் எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அந்த ஒரே கடையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், Bio-Data, ரேசன் கார்டு, ஆதார் கார்டு, RTI விண்ணப்பம், லேப்டாப் மற்றும் செல்போன் சர்வீஸ், இணையதள வங்கி சேவை, பணம் பரிமாற்றம், DTH ரீசார்ஜ், Travels, Taxi சர்வீஸ் ஆகியவற்றை செய்து வருவதாக கூறி ஏராளமான பெண்களை கடைக்கு வாடிக்கையாளராக்கி உள்ளனர் .

ஏர்வாடியில் மட்டும் ஏராளமான பெண்களின் செல்போனில் எனி டெஸ்க் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவர்களின் செல்போன்களை ரீஜார்ஜ் கடையில் இருந்தபடியே கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளது இந்த மோசடி கும்பல் என்கின்றனர் காவல்துறையினர்.

பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாசமான புகைப்படங்களை பாதுஷா, மலேசியாவில் வசிக்கும் நண்பரான செய்து ஆலிம் என்பவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி, அவர் மூலம் ஏர்வாடி பகுதியில் உள்ள மேலும் சிலருக்கு அந்த புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விவரம் ரகசியம் காப்பது முக்கியம் என்பதால் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக கைபேசி எண்ணான 94899 19722-ல் புகார் அளிக்கலாம்.

அதே நேரத்தில் செல்பொன் பழுது, மணி டிரான்ஸ்பர் மற்றும் ரீஜார்ஜ் சேவைக்கு கடைக்கு செல்லும் பெண்கள் அனாவசியமாக வெளி நபர்களை நம்பி எனி டெஸ்க் போன்ற விபரீத செயலிகளை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்ய அனுமதித்தால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments